வட மாநிலத்தவர் விழாவிற்காக 10 நாள் விடுமுறையா? பொது இடங்களில் இறைச்சியை சமைப்போம் :சீமான்

வட மாநிலத்தவர் விழாவிற்காக 10 நாள் விடுமுறையா? பொது இடங்களில் இறைச்சியை சமைப்போம் :சீமான்
வட மாநிலத்தவர் விழாவிற்காக 10 நாள் விடுமுறையா? பொது இடங்களில் இறைச்சியை சமைப்போம் :சீமான்
Published on

வடமாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கலாச்சாரப் படையெடுப்பிற்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது. அவ்வாறு அடிபணிந்தால் பொது இடங்களில் இறைச்சி சமைத்து உண்ணும் போராட்டங்கள் போன்ற எதிர்வினைகளை அரசால் தவிர்க்க முடியாததாகி, அதனால்  சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையும் ஏற்படும் என்று நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வடமாநிலத்தவர் கொண்டாடும் விழாவிற்காக தமிழ்நாடு முழுமைக்கும் 10 நாட்களுக்கு இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று வடமாநிலத்தவர் நலச்சங்கம் சார்பாக வழக்குத் தொடர்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. குருநானக் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா உள்ளிட்ட வட மாநில விழாக்களுக்குத் தமிழர்களின் பெருந்தன்மையால் தமிழகத்தில் விடுமுறை விடப்படுகிறது. ஆனால் இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்திலும் தமிழர் திருநாளான பொங்கல், முப்பாட்டன் முருகனைப் போற்றும் தைப்பூசம் உள்ளிட்ட எந்த வகையான தமிழர் விழாக்களுக்கும் விடுமுறை கூட அளிப்பதில்லை என்பது மற்ற மாநிலங்களில் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களுக்கும் தமிழர்களின் உணர்வுகளுக்கும் எத்தகைய மதிப்பு வழங்கப்படுகின்றன என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

கொல்லாமையைப் போதித்த மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஏற்கனவே ஒரு நாள் இறைச்சிக்கடைகள் தமிழகத்தில் மூடப்படுகிறது. அதைத் தமிழர்கள் நாம் இதுவரை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம் என்பது நமது பெருந்தன்மை. அதற்காகத் தொடர்ந்து பத்து நாட்கள் தமிழர்கள் அனைவரும் இறைச்சி உண்ணக்கூடாது என்று சட்டத்தின் மூலம் அடக்குமுறைக்குள்ளாக்க துணிவது தமிழர்களின் உணவை, உணர்வை, உரிமையைப் பறிக்கின்ற கொடுஞ்செயலாகும். இங்கு வந்து குடியேறி, தமிழர்களின் வரிப்பணத்தில் எல்லாவித சலுகைகள், அரசின் திட்டங்களையும் எவ்வித பாகுபாடுமின்றிப் பெற்றுக்கொண்டு, வளமோடு வாழவைத்த தமிழர்களுக்கு வடமாநிலத்தவர்கள் செய்யத் துணியும் துரோகமாகும்.

யார் என்ன படிக்க வேண்டும், என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என அடுத்தவர் தீர்மானிப்பதை அனுமதிப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமின்றிச் சமூகநீதிக்கும் எதிரானது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரிவினர் நோன்பு கடைப்பிடிக்கின்றனர். அதற்காக அந்த நாட்களில் மற்றவர்கள் யாரும் இறைச்சி உண்ணக்கூடாது என முடிவெடுத்தால் ஒவ்வொரு நாளுமே இறைச்சிக் கடைகள் மூடித்தான் இருக்க வேண்டும். யார் நோன்பு மேற்கொள்கிறார்களோ, யார் விழா கொண்டாடுகிறார்களோ, யாருக்கு உண்ண விருப்பமில்லையோ அவர்கள்தான் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிரத் தங்களது நிலைப்பாட்டை அடுத்தவர் மேல் திணிக்கக் கூடாது.

மேலும், இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி, ஆடு, மாடு, பன்றி போன்றவற்றின் பண்ணையாளர்கள், முதலீட்டாளர்கள், தொழிலாளர்கள், இறைச்சி விற்பனையில் ஈடுபட்டுள்ள முகவர்கள், கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் எனப் பல இலட்சக்கணக்கானவர்களை நேரடியாகப் பெரும் இழப்பிற்குத் தள்ள நினைக்கும் எண்ணம் மிகக்கொடுமையானது. ஏற்கனவே ஊரடங்கால் பெரும் இழப்புகளைச் சந்தித்து வரும் இறைச்சி விற்பனையாளர்களை 10 நாட்களுக்கு விற்பனைக் கூடாது எனத் தடுப்பது மேலும் துயரத்தில் ஆழ்த்துவதாகவே அமையும். தமிழக அரசுக்கு பெரும் வருமானம் ஈட்டித்தரக்கூடிய தொழிலான இறைச்சி விற்பனை மற்றும் அது சார்ந்த தொழில்களான உணவகங்கள், விடுதிகள் போன்றவையும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் கொரோனோ நோய்த்தொற்றுப் பரவி வரும் சூழலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் உள்ள உணவான இறைச்சியை மக்கள் அவரவர் விருப்பத்தின் பேரிலும் தேவையின் பொருட்டும் உண்பதற்கு தமிழக அரசு எத்தகைய இடையூறும் விளைவிக்கக்கூடாது.

கலாச்சாரப் படையெடுப்பாக நிகழும் வடமாநிலத்தவர்களின் இத்தகைய போக்குக்கு தமிழக அரசு ஒருபோதும் அடிபணியக் கூடாது என உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம். தவறும்பட்சத்தில் தமிழகத்தில் தடையை மீறி இறைச்சிக் கடைகள் திறப்பதும், அதற்குப் பாதுகாப்பாகப் பெருந்திரளாகப் அணிதிரள்வதும், பொது இடங்களில் இறைச்சி சமைத்து உண்ணும் போராட்டங்கள் போன்ற எதிர்வினைகளை அரசால் தவிர்க்க முடியாததாகி, அதனால் விளையும் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையும் ஏற்படலாம் என எச்சரிக்கிறேன். இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு தமிழக அரசு, இவ்விவகாரத்தில் உறுதியான எதிர்ப்பைப் பதிவு செய்து, தமிழர்களின் உரிமைக்கும் தமிழகத்தின் அமைதிக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய இப்பிரச்சினையை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை பெரும்பான்மை தமிழக மக்களின் உரிமையைப் பறிக்கின்ற இதுபோன்ற சதிச்செயல்களுக்கு தமிழக அரசு துணைபோனால், மக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் கடுமையான போராட்டங்களை தமிழக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com