வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணையை ரத்து செய்து கடந்த நவம்பர் 1ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக நிச்சயம் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஏற்கெனவே உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
அந்த மனுவில், நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை மீறாமல் 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதுவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டில்தான் உள் ஒதுக்கீடு தரப்பட்டது. உள் ஒதுக்கீடு என்பது வன்னியர் சமுதாயத்துக்கானது மட்டுமல்ல; 7 பிரிவினருக்கானது. அரசியலமைப்பு சட்டத்தின்படி உள் ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கெனவே முஸ்லிம் பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடும், அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. கல்வி, வேலையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு தரப்பட்டது.
தற்போது ஒட்டுமொத்த நிர்வாகமும் பெரும் இன்னல்களை இந்த தடை உத்தரவின் மூலமாக சந்தித்து இருப்பதாக தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது. மேலும், வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு தவறானது. உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க முகாந்திரம் உள்ளது; உடனடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று 100 பக்கங்களைக்கொண்ட விரிவான மேல் முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு வரும் வாரத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.