இறுதி பருவ தேர்வைத்தான் ரத்து செய்யக்கூடாது என யுஜிசி கூறியுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர்கள் வைத்துள்ள அரியர் அனைத்தும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அந்த மனுவில், அனைத்து பாடங்களிலும் படித்து தேர்ச்சியடைந்த மாணவர்களை அரசின் அறிவிப்பு சோர்வடைய செய்தும், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை தாழ்த்தும் வகையில் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
தேர்வில் பங்கேற்றால்தான் மாணவர்களுக்கு நம்பிக்கையும், மன திருப்தியும் கிடைக்கும் எனவும் இதுகுறித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த இரு வழக்குகளும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “யுஜிசி விதிகளுக்கு முரணாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். ஏ.ஐ.சி.டி.இயும் இது தவறு என அறிவுத்தி உள்ளது” என ராம்குமார் மற்றும் பாலகுருசாமி தரப்பு வாதாடியது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு “பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இறுதி பருவ தேர்வைத்தான் ரத்து செய்யக்கூடாது என யுஜிசி கூறியுள்ளது” எனத் தெரிவித்தது. தமிழக அரசு, ஏஐசிடிஇ, யுஜிசி செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.