தீபாவளிக்கு ஒரு வாரமே உள்ளதால், புத்தாடை மற்றும் வீட்டுச் சாதனங்கள் வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லையின் கடைவீதிகளில் இன்று மக்கள் கூட்டம் களைகட்டவுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சென்னையின் முக்கிய வணிக பகுதியான தியாகராய நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தித்திக்கும் தீபாவளி பண்டிகையைகொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். புத்தாடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், விளக்குகள் உள்ளிட்டவற்றை வாங்க மக்கள் கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை தியாகராயநகரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு செய்தார். ரங்கநாதன் தெருவில் நடந்துசென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதல்முறையாக தியாகராய நகரில் நவீன வசதிகொண்ட 6 FRC கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்றால், அவர்களை தனியாக கண்டறிந்து அடையாளம்காண இந்த கேமராக்கள் உதவும். மூன்று இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தியாகராயநகர், பாண்டிபஜார் முழுவதும் 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார்.
கடைவீதிகளில் மஃப்டியில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் எனவும் கூறினார். மக்கள் பயன்பெறும் வகையில் MAY I HELP YOU DESK என்ற ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், கார்களுக்கு தனித்தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.