செய்ததெல்லாம் தரமான சம்பவம்.. திக்குமுக்காடிய பிரிட்டிஷ் அரசாங்கம்-வ.உ.சியின் விடுதலை போராட்ட வரலாறு

வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு பிரிட்டிஷ் ஆட்சியே ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு காரணம் என்பதை உணர்ந்து, போலீசையும், அதிகாரிகளில் ஊழல்காரர்களையும் எதிர்த்தார். பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியையே எதிர்க்கும் இயக்கத்தோடு ஒன்றினார்.
வ.உ.சி
வ.உ.சிpt web
Published on

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு எதற்காக வந்தார்கள்? வாணிபம் செய்வதற்காக வந்தார்கள் என்பதே அனைவரது பதிலாக இருக்கும். ஆனால், இந்தியர்கள் வாணிபம் செய்து வெள்ளையர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கி அவர்களை இந்தியாவை விட்டு ஓடச் செய்ய வேண்டும் என்று ஒருவர் முடிவெடுத்தார். தற்போதைய காலத்தில் பிரபலமான சினிமா வசனம் ஒன்று.. அவன் பொருளை வச்சு அவனையே செய்யுறோம் என்பது.. இந்த வாக்கியத்தை 100 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் வாழ்ந்து காட்டினார். பொருளாதாரம் தான் உலகை வெல்ல வழி என்று பொருளாராதத்தை வைத்தே நாடுகளின் இடத்தை கணக்கிட்டு வரும் இன்றைய சூழலில் நூற்றாண்டுக்கு முன்பே அதை செயல்படுத்திய தமிழர் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம். மக்களது அன்பால் வ.உ.சி என அழைக்கப்படுபவர்.

விடுதலை உணர்வோடு வளர்ந்த வ.உ.சி!

1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாளுக்கு மூத்த மகனாக பிறந்தவர் வ.உ.சி. ஒட்டப்பிடாரம் என்பது கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட இடம். ஒரு குறிப்பிட்ட நபர் ஒரு சமூகத்திற்கோ அல்லது மக்கள் கூட்டத்திற்கோ பாதுகாப்பாக இருந்து பிறரது சூழ்ச்சியாலோ துரோகத்தாலோ உயிர் துறந்தால் அவர்களை தமிழ் மக்கள் தங்களது பாட்டுகளில் உயிர்பித்து வைத்திருப்பர். அப்படி கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் என ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு இன்னுயிரை நீத்த வீரர்களின் பெருமைகளையும் வரலாறையும் மக்கள் தங்களது பாட்டுகளில் வைத்திருந்தனர். அந்த பாட்டுகளை சிறுவயதில் இருந்தே கேட்டு வளர்ந்த வ.உ.சி.க்கு கூடவே விடுதலை உணர்வும் வளர்ந்தது.

குமாஸ்தா வேலையில் தொடங்கிய வாழ்க்கை; ஆனால்..!

செல்வமிக்க குடும்பத்தில் பிறந்த வ.உ.சி.க்கு ஆரம்ப கல்விப் படிப்பு முடிந்ததும் அவருக்காவே அவரது தந்தை நடுநிலைப் பள்ளியைத் தொடங்கினார். நடுநிலைப் பள்ளிக்கல்வி முடிந்ததும் உயர்கல்விக்காக தூத்துக்குடிக்கு செல்லும் வ.உ.சி.க்கு படிப்பு முடிந்ததும் அவரது தந்தை தாலுகா ஆபீஸில் குமாஸ்தா வேலை வாங்கித் தந்தார். சிறுவயது முதல் வீரம் செறிந்த பாடல்களையும் விடுதலை போராட்ட வீரர்களின் கதைகளையும் கேட்டு வளர்ந்த வ.உ.சி.க்கு ஆங்கிலேயர்களின் கீழ் வேலை பார்ப்பது கசந்தது.

சன்னது பட்டம் பெற்று ஏழைகளுக்காக வாதாடிய வ.உ.சி!

தந்தையிடம் திருச்சிராப்பள்ளிக்கு சென்று வழக்கறிஞராக வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவிக்கிறார். தந்தை அனுமதிக்க, இரண்டு புகழ்பெற்ற வழக்கறிஞர்களிடம் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்து சன்னது பட்டம் பெற்ற வ.உ.சி. ஏழைமக்களுக்காக வழக்காட ஆரம்பித்தார். ஏழை மக்களது நிலங்களை கைப்பற்றிக் கொண்ட, அவர்களை அடிமைகளாக வைத்துள்ள ஜமீன்தார்களுக்கு எதிராக வாதாடி ஏழை மக்களுக்கு நியாயங்களைப் பெற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

”தன் மீதான பொய் வழக்குகளை தவிடு பொடியாக்கியவர்”

இதை பொறுத்துக் கொள்ளாத அதிகார வர்க்கமும் அதிகாரிகளும் அவர் மீது பொய்வழக்குகளைப் போட ஆரம்பித்தனர். அனைத்திலும் வென்ற வ.உ.சி.க்கு மக்கள் மத்தியிலும் செல்வாக்கு கூடியது. ஒரு கட்டத்தில் மூன்று சப் மாஜிஸ்ட்ரேட்டுகள் மீது லஞ்சம், ஊழல் போன்ற புகார்களை பொதுமக்கள் வ.உ.சி.யிடம் கொண்டு வந்தனர். இந்த வழக்கை நடத்திய வ.உ.சி. வெற்றி பெற்றார். இதன் விளைவாக ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். இருவர் பதவி குறைப்பு செய்யப்பட்டனர்.

வ.உ. சிதம்பரனாரின் 152வது பிறந்தநாள் இன்று
வ.உ. சிதம்பரனாரின் 152வது பிறந்தநாள் இன்று

”திலகர் கொள்கையைக் கடைபிடித்து விடுதலை போராட்ட களத்தில் குதித்த வ.உ.சி”

இதனை அடுத்து தொழில்முறை காரணமாக தூத்துக்குடிக்கு இடம்பெயர்ந்த வ.உ.சி.க்கு அங்கு இந்திய தேசிய இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அவரது அரசியல் வாழ்வின் தொடக்க காலமாக அது அமைந்தது. வ.உ.சி.யின் அரசியல் வாழ்வை குறிக்கும் விதமாக ‘வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி’ எனும் புத்தகத்தில் வானமாமலை குறிப்பிடுகையில், “வ.உ.சி. ஏழைகளது நியாயத்திற்காக போராடுகிற வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு பிரிட்டிஷ் ஆட்சியே ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு காரணம் என்பதை உணர்ந்து, போலீசையும், அதிகாரிகளில் ஊழல்காரர்களையும் எதிர்த்தார். பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியையே எதிர்க்கும் இயக்கத்தோடு ஒன்றினார். பிரிட்டிஷ் ஆட்சியையே ஒழிப்பதற்காக மக்களைத் திரட்ட வேண்டுமென்ற திலகர் கொள்கையைக் கடைபிடித்து பலதுறை இயக்கங்களில் ஈடுபடலானார். அவரது பணிகள் விரிவடைந்தன” எனக் கூறியுள்ளார்.

10 லட்சம் முதலீட்டில் 40 ஆயிரம் பங்குகள் - கப்பல் கனவு

ஆங்கிலேயரது விரட்ட வேண்டுமானால் அவர்களது வணிகத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்ட வ.உ.சி. கூட்டுறவு இயக்கம், தொழிலாளர் இயக்கம், சுதேசி இயக்கம் என மூன்று இயக்கங்களில் கூடுதலாக கவனம் செலுத்தினார். ஆங்கிலேயரது பொருளாதாரம் உச்சத்தில் இருந்ததற்கு காரணம் அவர்களது கப்பல் போக்குவரத்து என்பதை உணர்ந்த வ.உ.சி. சுதேசி ஸ்டீம் நாவிகேசன் எனும் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி தொடங்கினார். கப்பல் நிறுவனத்தை தொடங்க பணம் தந்தவர்கள் பங்குதாரர்கள் ஆக்கப்பட்டார்கள். 10 லட்சம் முதலீட்டில் 40 ஆயிரம் பங்குகள் உருவாக்கப்பட்டன. முதலில் ஷாவ்லைன் ஸ்டீமர்ஸ் கம்பெனியிடம் இருந்து வாடகைக் கப்பல் பெறப்பட்டது. தூத்துக்குடி முதல் கொழும்பு வரை கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத ஆங்கிலேயர்கள் கப்பலை வாடகைக்கு தந்த நிறுவனத்தை மிரட்டினர். அதன் விளைவாக கப்பல் திரும்ப பெறப்பட்டது.

முதலில் வாங்கப்பட்ட பிரெஞ்சு கப்பல்!

சொந்தமாக கப்பல் வாங்குவதே இதற்கான தீர்வு என்பதை உணர்ந்த வ.உ.சி. வட இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு தனது திட்டத்தை விளக்கி வட இந்திய வணிகர்களிடம் பொருளுதவி பெற்றார். முதலில் எஸ்.எஸ்.காளியோ என்ற பிரெஞ்சுக் கப்பல் வாங்கப்பட்டது. தொடர்ந்து எஸ்.வேத மூர்த்தி என்பவரது உதவியால் எஸ்.எஸ்.லாவோ என்ற மற்றொரு பிரெஞ்சுக் கப்பலும் வாங்கப்பட்டது. சுதந்திர தாகம் கொண்ட வணிகர்கள் தங்களது சரக்குகளை வ.உ.சி. வாங்கிய கப்பல்களில் ஏற்றுவதையே விரும்பினர்.

வ.உ.சியின் முயற்சியால் பயந்து பிரிட்டீஷ் மேற்கொண்ட கட்டண குறைப்புகள்

இரு கப்பல்களும் வெற்றிகரமாக இயங்கியதால் பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்திற்கு பெரும் அடி விழுந்தது. இதன் விளைவாக பிரிட்டிஷ் சரக்குக் கட்டணம் குறைப்பு, பயணிகளின் கட்டணம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பயணிகளுக்கு இலவச பயணத் திட்டத்தையும் அறிவித்தது. மேலும் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் மீது பல குற்றச்சாட்டுகளையும் சுமத்தி அதை முடக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இதன் விளைவாக சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் பங்குதாரர்கள் வ.உ.சி.க்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர். வணிகத்தில் அரசியல் வேண்டாம் என்றனர். ஆனால் வ.உ.சி. அரசியல் நோக்கத்திற்காகத்தான் கப்பல் நிறுவனத்தை தொடர்ங்கினார் என்பது உண்மை. பங்குதாரர்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக செயலாளர் பதவியில் இருந்து விலகினார். ஆங்கிலேயர்கள் எதிர்ப்புகள், நிறுவனத்திற்குள் நிகழ்ந்த பிரச்சனைகள் என பல்வேறு காரணங்களால் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் படிப்படியாக சரிந்தது.

தடையை மீறி கலந்து கொண்ட வ.உ.சி

இச்சமயத்தில் வங்காளப்பிரிவினைக்கு எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்ட பிபின் சந்திரபால் 1908 மார்ச் 9 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடும் நோக்கில் வ.உ.சி. மற்றும் சுப்பிரமாணிய சிவா பல்வேறு ஏற்பாடுகளை செய்தனர். இந்நிகழ்வுகளில் சிவா மற்றும் வ.உ.சி. கலந்துகொள்ளக்கூடாது என அரசு கூறியும் இருவரும் கலந்துகொண்டனர். திருநெல்வேலியில் கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.

பாளையக்கோட்டை சிறையில் வ.உ.சி

இந்நிலையில், தன்னை சந்திக்க வருமாறு ஆட்சியர் விஞ்சு இருவருக்கும் அழைப்புவிடுத்தார். இச்சந்திப்பு மார்ச் 12 ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் பாரதியார் இச்சந்திப்பை குறித்து தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். அச்சந்திப்பின் போது, இந்திய சுதந்திரத்திற்காக வ.உ.சி. செய்ததை எல்லாம் குற்றங்களாக அடுக்கிய ஆட்சியர் விஞ்சு முடிவில் இருவரிடமும் ஓராண்டு நன்னடத்தை ஜாமீன் அல்லது மாவட்டத்திற்கு வெளியே சென்று இருக்கும்படி உத்தரவிட்டார். இரண்டிற்கும் இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் ஓராண்டு பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் இருக்க உத்தரவிட்டார்.

வெடித்த மக்கள் போராட்டம் - 4 பேரை சுட்டுக் கொன்ற உதவி கலெக்டர் ஆஷ்!

இச்செய்தி நகரெங்கும் பரவியது. மக்கள் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். காவல்நிலையங்கள் , அரசு அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த கலவரத்தில் உதவி கலெக்டராக இருந்த ஆஷ் 4 பேரை சுட்டுக் கொன்றார். வ.உ.சி மற்றும் சிவா கைது செய்யப்பட்டனர். கலவரம் தொடர்பான வழக்குகளும் சேர்க்கப்பட்டன. வழக்கு நடந்தது. ஜூலை 7 ஆம் தேதி தீர்ப்பை வாசித்த நீதிபதி பின்ஹே வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கினார். நாடு முழுவதிலிமுள்ள பல்வேறு தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேல் முறையீட்டில் தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

கொடுமைகளை அனுபவித்து வெளியே வந்த வ.உ.சி.. வரவேற்ப யாருமில்லா அவலம்!

கைது செய்யப்பட்ட வ.உ.சி. ஜெயிலில் செக்கிழுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் அவர் தனது எழுத்துப்பணிகளை மேற்கொண்டார். சிறையில் அளிக்கப்பட்ட தொடர்ச்சியான வேலை போன்ற பல்வேறு காரணங்களால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. விளைவாக 1912 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். வ.உ.சி. சிறைக்குச் செல்லும் போது மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த ஆதரவு அவர் விடுதலை ஆன போது இல்லை. அவரை வரவேற்க அவரது நண்பர் சிவா மட்டுமே வந்திருந்தார்.

அவ்வப்போது விடுதலைப் போராட்டங்கள், கூட்டங்கள் என கலந்து கொண்ட வ.உ.சி. முழுக்க முழுக்க தனது எழுத்துப் பணிகளில் கவனம் செலுத்தினார். பாரதியின் பாடல்களில் பெரும் ஈடுபாடுகளைக் கொண்டிருந்த வ.உ.சி 1936 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உயிர் பிரிந்தார்.

சுதந்திரத்திற்காக போராடியவர்கள் ஆங்கிலேயரை ஆயுதம் கொண்டு அடித்து விரட்ட வேண்டும் என்றனர். காந்தியின் வருகைக்கு பின் அஹிம்சை முறையில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் பொருளாதார ரீதியாக ஆங்கிலேயரை எதிர்த்து போரிட வேண்டும் என உரக்கச் சொன்னவர் வ.உ.சி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com