குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, வடமாநிலங்களிலும், மேற்குவங்கத்திலும் அதிக அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீஸ் நடத்திய தடியடியில் பல மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழும்பியுள்ளது. பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி, லக்னோவில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தமிழக மாணவர்களும் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.
டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து லயோலா கல்லூரி மாணவர்கள், ஐஐடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவை மற்றும் மதுரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.