கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூ.875 லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கலான பட்ஜெட்டில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான நிதி இரட்டிப்பாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.26,932 கோடியும், உயர்கல்விக்கு ரூ.3680 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.582.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 200 புதிய ஆவின் பாலகங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் ரூ.150 கோடி செலவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ கல்விக்கான பட்டமேற்படிப்பு இடங்கள் 1,188 லிருந்து 1,362 உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவசத் திட்டங்களுக்கு 1503 கோடி ரூபாயும், மடிக்கணினி திட்டத்திற்கு ரூ. 758 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.