சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் பேரன் அரவிந்த்ராஜ் - பிரியதர்ஷனி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.
நிகழ்வின்போது மேடையில் பேசிய முதலமைச்சர் கூறுகையில், “கருணாநிதி உதவியாளராக இருந்த சண்முகநாதன் திருமணத்திற்கு நானும், என் அண்ணன் அழகிரியும் மாப்பிள்ளை தோழர்களாக இருந்தோம். அந்த அளவிற்கு எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தவர் அவர். தலைவர் கருணாநிதிக்கு நான் எப்படி ஒரு மகனோ, அதேபோன்று சண்முகநாதனும் ஒரு மகன் தான்” என்று கூறினார். மேலும் “அவரை நாங்கள் எல்லோரும் குட்டி பி.ஏ. என்று தான் அழைப்போம். 1962ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், தனக்கு உதவியாளராக சண்முகநாதன் தான் வர வேண்டும் என்று கருணாநிதி அழைத்துக்கொண்டார். அதன்பின் கலைஞர் மறையும் வரை அவருடனே இருந்தார் சண்முகநாதன்” என்று கூறினார்.
“முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் அதிகம் பேசிய ஒரு நபரும், அவர் பேச அதிகம் கேட்ட ஒரு நபரும் என்றால், அது சண்முகநாதன் தான். அவர் மறைவதற்கு 2 மாதம் முன்பு உடல்நிலை சரியில்லாமல்போன பிறகு அவரை அடிக்கடி வீட்டில் சென்று பார்த்தேன். அதேபோல் கொரோனா காலத்தில், காணொளி காட்சி மூலம் நான் பொதுமக்களிடம் பேசிய காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, எனக்கு தொலைபேசி வாயிலில் அழைப்பு விடுத்து பேசுவார். அப்போது இவற்றை பார்க்க தலைவர் கருணாநிதி இல்லையே என்று வருத்தப்பட்டு கூறினார். இன்று மற்றவர்கள் பாராட்டும் அளவிற்கு நான் இந்த புகழை அடைந்துள்ளேன் என்றால், அதற்கு சண்முகநாதனும் ஒரு காரணம்” என்று பெருமிதம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கவிஞர் வைரமுத்துவும் கலந்துகொண்டார். மேடையில் அவர் பேசுகையில், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர், சாதிக்க பிறந்த தமிழன். திராவிட மாடல் என்ற பெயரை இந்திய துணை கண்டம் முழுக்க உச்சரிக்க செய்தது மட்டுமல்லாமல், நாளை அதனை பின்பற்ற வேண்டும் என்று செயல்படுவர். பழகியவர்கள் அறிவார்கள் யார் சண்முகநாதன் என்று..? கோபாலபுரம் இல்லத்திற்குள் முதலில் நுழைந்து, கடைசியில் வெளியில் வரும் ஒரு நபர் அவர் தான். கருணாநிதி, அண்ணா என்ற பெயருக்கு பின் அதிகம் உச்சரித்த பெயர் சண்முகநாதன். அதுமட்டுமின்றி விசுவாசம் உள்ள வேலைக்காரன் சண்முகநாதன்; ரகசியம் காக்கும் விசுவாசக்காரன் அவர். தன் வாழ்நாள் முழுக்க கலைஞருக்கு, கழகத்திற்கு என்று வாழ்ந்தவர்.
இதையும் படிங்க... காங்கிரஸின் அடுத்த தலைமை ராகுலா? பிரியங்காவா?- தலைவர்கள் முக்கிய முடிவு
தன்னை நம்பி வந்தவர்களை காக்க கடைசி வரை துணை நிற்கும் குடும்பம்தான் கருணாநிதி குடும்பம். ஒரு துளி சமுத்திரத்தில் விழுந்தால், அந்த துளியும் சமுத்திரம் ஆகும். அதுபோன்றுதான் ஒரு குடும்பம், ஒரு லட்சிய குடும்பத்தில் இணைந்து சமுத்திரமாகியுள்ளது. அதற்கு சண்முகநாதன் குடும்பம் தான் உதாரணம். அதனால் தான் இது தமிழ்நாட்டு திருமணமாக கருதப்படுகிறது. முதலமைச்சர் நினைத்தால் அம்பானி, அதானி, எலன் மாஸ்க் ஆகியோருடன் அமர்ந்து சாப்பிடலாம். ஆனால் அவர் உணவருந்த சாப்பிட தேர்ந்தெடுத்த இடம் ஒரு நரிக்குறவர் இல்லம்” என்று கூறியவர், “அதுவே அவரின் மேன்மையை, எளிமையை காட்டுகிறது” என்றார்.