மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஹெச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் ஹெச்.சி.எல் குழும தலைவர் ரோஷினி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் அமைச்சர்கள், துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, உதயநிதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் கலந்து கொண்டனர். எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, சு.வெங்கடேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆயுதப்படை மைதானத்தில், ஏறத்தாழ 40,000 மக்களும் 10,000-க்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவர்களும் நூலகம் திறக்கும் நிகழ்வை காண கூடியுள்ளனர்.
மதுரையில் புது நத்தம் சாலையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. 6 தளங்களை கொண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் 120 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது
அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி - நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு போன்றவை இடம் பெற்றுள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு பிரிவு, உறுப்பினர் சேர்கை பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ் மற்றும் பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, அறிவியல் கருவிகள் பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞர் நூல்களை கொண்ட பிரத்யேக பிரிவு அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் தளத்தில் ஆங்கில நூல்கள் மற்றும் ஆராய்ச்சி நூல்கள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
நான்காம் தளத்தில் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் விதமாக 30 ஆயிரம் புத்தகங்களை கொண்ட பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் தளத்தில் மின்னணு தொழில்நுட்பத்தின் வாயிலாக அறிவு செல்வங்கள் அனைத்தையும் தரும் பிரிவு அமைந்துள்ளது. ஆறாம் தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாக பணியாளர் சார்ந்த பிரிவு இருக்கின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்களும் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் மேலிருந்து கீழே இறங்க தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நூலகம் முற்றிலும் டிஜிட்டல் மயமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கையர், திருநம்பியருக்காக தனி கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நூலகத்தை மக்கள் பயன்படுத்த முற்றிலும் இலவசம் என்றும் சந்தாதாரராக இணைய வேண்டுமென்றால் அதற்கு 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூலகத்தின் முதல் சந்தாதாரராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.