நீட் தேர்வு முடிவு அச்சம் காரணமாக தற்கொலை செய்திருந்த மாணவி கனிமொழியின் இறப்பை தொடர்ந்து, “மாணவச் செல்வங்களின் உயிர்ப்பலிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கேட்டுக்கொள்கிறேன். சமரசமில்லாச் சட்டப்போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் என்னும் உயிர்க்கொல்லிக்கு, அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப்பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாணவ சமுதாயத்தையும், அவர்களின் பெற்ரோரையும் தமிழக முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப்பற்றிக்கொண்டு இதை நான் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வினை தொடக்கம் முதலே நாங்கள் எதிர்த்து வருகிறோம். அதற்கான சட்டபோராட்டத்தையும் முழு வீச்சில் தொடங்கியிருக்கிறோம். பாஜக தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச் சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன்.
நீட் தேர்வு என்பது தகுதியை எடைபோடும் தேர்வல்ல என்பதை ஆள்மாறாட்டம் - வினாத்தாள் விற்பனை - பயிற்சி நிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள் தொடர்ந்து அமல்படுத்தி வருகின்றன. கல்வியில் சமத்துவத்தை சீர்குலைக்கும் நீட் தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொள்கிறது.
மாணவி கனிமொழியின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இனி இதுபோன்ற இன்னொரு இரங்கல் செய்திக்கு இடம்தராத சூழலை உருவாக்குவோம்” எனக்கூறியுள்ளார்.