“எதிர்பார்க்கவே இல்ல... முதல்வருக்கு மனமார்ந்த நன்றி” - அமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதி நெகிழ்ச்சி!
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் நடைபெற்று வரக்கூடிய இரண்டாம் கட்ட மழை நீர் வடிகால் பணிகளை பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு செய்தார். கடைசி இடமாக அசோக் நகர் பகுதியில் ஆய்வு செய்தார். அதை முடித்த பிறகு காரில் ஏறி புறப்பட்டார். அப்போது அ.மு.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி சாலையில் காத்திருந்ததை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கிவந்து நலம் விசாரித்தார்.
பின்னர் அசோக் நகர் பகுதியில் மழைக்காலத்தில் இருக்கும் பாதிப்புகளை சி.ஆர்,சரஸ்வதி முதலமைச்சரிடம் நேரடியாக தெரிவித்தார்.
இந்நிகழ்வு தொடர்பாக புதிய தலைமுறையுடன் பேசிய சி.ஆர்.சரஸ்வதி, “வேறொரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, வீட்டுக்கு அப்போதுதான் திரும்பினேன். என் வீடு இங்குதான் உள்ளது. நான் வந்தபோது முதல்வர் இப்பக்கமாக செல்வதாக இப்பகுதி மக்கள் கூறினார்கள். நம் எல்லோருக்கும் அவர் முதல்வர் தானே.. அதனால் மரியாதை நிமித்தமாக நானும் சாலையிலேயே நின்றுவிட்டேன்.
காரில் இருந்தபோது என்னை பார்த்த முதல்வர், இறங்கி வந்து ‘இங்கதான் இருக்கீங்களா’ என கேட்டு நலம் விசாரித்து பேசினார். நான் எதிர்பார்க்கவேயில்லை அதை. ‘ஏன் சார், நானே வந்திருப்பனே’ என்றேன். பரவாயில்லை என்றவர், இப்பகுதியின் குறைகளை கேட்டறிந்தார்.
நான் இங்குள்ள கழிவுநீர் சாக்கடை குற்றச்சாட்டுகளை அவரிடம் சொன்னேன். அனைத்தையும் கேட்டுவிட்டு ‘அதை பார்வையிடத்தான் நானே நேரடியாக வந்தேன். நிச்சயம் சரிசெய்யப்படும்’ என்றார். நான் இதை எதிர்பார்க்கவில்லை. மனமார்ந்த நன்றியை அவருக்கு சொல்லிக்கொள்கிறேன். முதல்வராக அவரை பார்ப்பதிலும், இறங்கி நின்று பதில் சொல்லிவிட்டு அவர் சென்றதும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் நெகிழ்ச்சியுடன்.