உயிரும் உடலும் போல தமிழகத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கொல்லன்விளையில் வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரமம் சார்பில் ஹிந்துதர்ம வித்யாபீட பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு 15-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வித்யாஜோதி பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து அங்கு பேசிய அவர் "குமரிக்கு வரும்போது தாய்வீட்டிற்கு வந்த குழந்தையை போல எனது மன எண்ணம் இருக்கும், ஆளுநராக இருந்தாலும் தான் தமிழகத்தின் மகள் தமிழகத்தில் பண்பாட்டை மீட்டெடுப்பதில் என்றும் எனது பங்கு இருக்கும்.
தமிழகத்தில் ஆன்மிகம் குறித்து பேச துவங்கிவிட்டால் பேசக்கூடாததை பேசிவிட்டது போல் ஒரு மாய தோற்றம் ஏற்படுகிறது. ஆன்மிகம் தான் அடிப்படை காவியின் பலம் கருப்பினால் அழிந்துவிடக் கூடாது தர்மம் என்ற தேர் எரியாமல் இருக்க வேண்டுமென்றால் பல கண்ணன்கள் உருவாக வேண்டும்.
ஆன்மிகத்திற்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை. தமிழை வேறு யாரெல்லாமோ வளர்த்தார்கள் என தெரிவிப்பது தவறு. ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழை வளர்தார்கள். உயிரையும் உடலையும் போல் தமிழகத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது
அவநம்பிக்கை எனக் கூறிவிட்டு சிலபேர் வீட்டில் உள்ளவர்களை வைத்து சாமி கும்பிட வைப்பார்கள் மறைமுகமாக சாமி கும்பிடுகிறார்கள் என பேசினார்.