விரைவு செய்திகள்: 12 மாவட்டங்களில் மழை வாய்ப்பு | சித்தா, ஆயுர்வேத கொரோனா சிகிச்சை மையம்

விரைவு செய்திகள்: 12 மாவட்டங்களில் மழை வாய்ப்பு | சித்தா, ஆயுர்வேத கொரோனா சிகிச்சை மையம்
விரைவு செய்திகள்: 12 மாவட்டங்களில் மழை வாய்ப்பு | சித்தா, ஆயுர்வேத கொரோனா சிகிச்சை மையம்
Published on

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் கோரிக்கை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், 7 பேர் விடுதலை விவகாரத்தில், குடியரசுத் தலைவர் அளவுக்குச் செல்லாமல் அரசமைப்புச் சட்டம் 161 பிரிவின் கீழ் அவர்களை மாநில அரசு விடுதலை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார். 7 பேரையும் விடுவிப்பதாக சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அதற்கு ஒப்புதல் கிடைக்கும் வரை அனைவரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, பேரறிவாளன் உள்பட 7 பேரையும் உடனடியாக குடியரசுத் தலைவர் விடுதலைச் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு?: தமிழகத்தில் ஏற்கெனவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையாததால், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்படி வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 2 ஆவது நாளாக மாலை நேரத்தில் மழைபெய்து வருகிறது. காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துவருகிறது. மேலும் சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதவிர ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழை பெய்யும் என தகவல் தெரிவித்துள்ளது.

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து: கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5,000 குப்பி மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது. தேவையான மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் அந்தந்த முகமைகள் மூலம் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளி உயிரிழப்பு - விசாரணைக்கு அரசு உத்தரவு: கடலூரில் கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜனை நிறுத்தியதால் உயிரிழந்ததாக அவருடைய மனைவி குற்றச்சாட்டிய நிலையில், இதுகுறித்து விசாரிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

முன்களப் பணியாளர்களுக்காக இயக்கப்படும் பேருந்துகள்: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வரும் 24 ஆம் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆயினும், முன்களப்பணியாளர்களுக்காக விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மாவட்டத்துக்குள் முன்களப்பணியாளர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நெருக்கடியான நேரத்தில் பலரும் ஓய்வில் இருக்கும் நிலையில் இந்த அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்கள் பணியை தொடர்கிறார்கள்.

வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு: தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள "தி ஃபேமிலி மேன் 2" வெப் தொடரின் ஒளிபரப்பை ரத்து செய்யவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். விடுதலை புலிகளை தீவிரவாதிகளாகவும், தமிழர்களை வன்முறையாளர்களாகவும் காட்ட முற்படும் அந்த வெப் தொடர், முழுக்க முழுக்க உள்நோக்கத்துடனும், தமிழர்கள் மீதான வன்மத்துடனும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தவறாக எடுக்கப்பட்ட இனம், மெட்ராஸ் கஃபே போன்ற திரைப்படங்கள் ரத்து செய்யப்பட்டதைப் போலவே "தி ஃபேமிலி மேன் 2" எனும் வெப் தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் மிதமான மழை: டெல்லியில் பல இடங்களில் இன்று மிதமான மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை தொடரும் என்றும் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சித்தா ஆயுர்வேத கொரோனா சிகிச்சை மையம் தொடக்கம்: திருவள்ளூர் மாவட்டத்தில் நூறு படுக்கைகளுடன் இலவச சித்தா, ஆயுர்வேத கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. மருத்துவ மையத்தை, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடக்கி வைத்தார். இதையடுத்து தனியார் மருத்துவக் கல்லூரியில் தயார் நிலையில் உள்ள ஆக்சிஜன் படுக்கை வசதிகளை பார்வையிட்ட அமைச்சர், கிருமி நாசினி தெளிக்கும் வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com