மேகதாது - 2 மாநிலங்கள் நலன் காக்கப்படும்: மேகதாது விவகாரத்தில் இரு மாநிலங்களின் நலன் காக்கும் வகையில் முடிவெடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை சந்தித்தபின் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார்.
நீட் குழு - எதிர்த்த பாஜகவின் கரு.நாகராஜன் மனு தள்ளுபடி: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வுசெய்ய தமிழக அரசு குழு அமைத்ததை எதிர்த்த பாஜகவின் கரு.நாகராஜன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்கள் கருத்து கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: செப்டம்பர் மாதம் நடக்கும் நீட் தேர்வில் பங்கேற்பதற்கு விண்ணப்பம் செய்ய இணையதளத்தில் அனுமதி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரேநேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பம் செய்ததால் சிறிது நேரம் இணையதளம் முடங்கியது.
நீட் - ஏ.கே.ராஜன் குழு நாளை அறிக்கை தாக்கல்: நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு, நாளை முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யவிருக்கிறது. ஏ.கே.ராஜன் குழு அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி-க்கு 4 உறுப்பினர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ்.முனியநாதன் ஐஏஎஸ், பேராசிரியர் கே.ஜோதி சிவஞானம், கே.அருள்மதி, ஏ. ராஜ் மரியசூசை ஆகியோருக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு 1 கோடி தடுப்பூசி - முதல்வர் கோரிக்கை: தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். அண்மையில் சரத் பவார், மம்தா பானர்ஜியை சந்தித்த நிலையில், இது முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனையாக கருதப்படுகிறது.
பணம் பறிக்க கேரள ஜோடி நாடகமா?: பழனியில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் தெரிவித்த கேரள பெண், எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை என மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது. பணம் பறிக்க கேரள ஜோடி நாடகமா? என பெண்ணிடம் தமிழக தனிப்படை காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் விஜய்க்கு நீதிபதி கண்டிப்பு: வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. சமூக நீதிக்காக போராடும் கதாநாயகனாக திரையில் காட்டிக் கொள்ளும் நடிகர் வரி செலுத்த மறுப்பது தவறான முன்னுதாரணம் என கண்டித்துள்ளனர்.
இந்தியாவுக்கு பதக்கங்கள் பெற்றுத்தர ஊக்கம்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் கலந்துரையடினார். இந்தியாவுக்கு பதக்கங்களை பெற்றுத் தர ஊக்கமளித்து பேசினார்.
டோக்கியோ சென்றடைந்த இந்தியாவின் முதல் குழு: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் குழு ஜப்பான் சென்றடைந்தது. டோக்கியோ சென்றடைந்த இந்திய படகுப் போட்டிக்குழுவின் படங்களை இந்திய விளையாட்டு ஆணையம் பகிர்ந்திருக்கிறது.