கூடுதல் தளர்வுகளா? கூடுதல் கட்டுப்பாடுகளா?: ஊரடங்கு நீட்டிப்பில் கூடுதல் தளர்வுகளை வழங்கலாமா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். பள்ளிக்கூடங்கள் மற்றும் திரையரங்குகளை திறப்பது பற்றியும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஆளுநரிடம் ஓபிஎஸ்-இபிஎஸ் புகார்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தமிழக அரசு பழிவாங்கும் போக்குடன் நடக்கிறது என ஆளுநரை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் புகார் அளித்திருக்கின்றனர்.
13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி முதல் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
பழைய ஓய்வூதிய திட்டம்: அமைச்சர் விளக்கம்: நிதி நிலைமை மந்த நிலையில் இருப்பதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார்.
ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு: சொத்துக்குவிப்பு புகாரை விசாரிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.
தரமற்ற கட்டடம்-பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்: புதிய தலைமுறை அம்பலப்படுத்திய புளியந்தோப்பு கட்டடத்தின் அவல நிலை குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தரமற்ற முறையில் விரைவாக கட்டடத்தை கட்டியிருப்பதாக திமுக எம்எல்ஏ பரந்தாமன் புகார் அளித்திருக்கிறார்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர்: தரமற்ற கட்டட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முதலமைச்சர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார் எனவும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
மாநில மொழியில் பதிலளிக்க உத்தரவு: மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. செய்தியாக இருந்தாலும் விளக்கமாக இருந்தாலும் தாய்மொழியில் புரிந்துகொள்ளும்போதுதான் முழுமையடைவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஓணம் பண்டிகை - பூக்கள் விலை உயர்வு: கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பூக்களின் வரத்து குறைவால் விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற உத்தரவு: மைசூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்களை சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது. சென்னையிலுள்ள தொல்லியல் துறை கிளையின் பெயரை தமிழ் கல்வெட்டு இயல் கிளை என மாற்றவும் ஆணையிட்டுள்ளது.
அவன் இவன் பட வழக்கு - பாலா விடுவிப்பு: அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அம்பாசமுத்திரம் நீதிமன்றம் இயக்குநர் பாலாவை விடுவித்தது.
தேர்தல் வன்முறை வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்: மேற்குவங்க தேர்தல் வன்முறை தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களது கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
விமான நிலையத்தில் கண்ணீர் புகை வீச்சு: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் கட்டுங்கடங்காத கூட்டம் கூடியதால் கூட்டத்தை கலைக்க அமெரிக்க படையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசினர்.
இன்று பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே: ஐபிஎல் தொடருக்காக இன்று பயிற்சியை தொடங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நடப்புச் சாம்பியன் மும்பை நாளை முதல் பயிற்சியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறது.