பயிர்க்காப்பீடு - பிரதமருக்கு முதல்வர் கடிதம்: பயிர்க்காப்பீட்டு கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பை முன்பிருந்தபடி மாற்றியமைக்க வேண்டும் எனவும், புதிய பங்களிப்பு முறை காப்பீட்டு திட்டத்தின் நோக்கத்தையே முடக்கிவிட்டதாகவும் பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
முன்னாள் சிறப்பு டிஐஜி மீது குற்றப்பத்திரிகை: பாலியல் புகாருக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் நீதிமன்றத்தில் 400 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்தது.
தொல்லியல் ஆய்வுகள் பற்றிய விமர்சனத்திற்கு பதில்: தமிழின் பெருமையை நிரூபிக்கும் வகையில் சான்றுகள் கிடைத்தாலும் அது சிலருக்கு பிடிக்கவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்திருக்கிறார். வார இதழ் ஒன்றில் தொல்லியல்துறை குறித்து விமர்சித்து எழுதப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
பெகாசஸ் விவகாரம் - நாடாளுமன்றம் ஒத்திவைப்பு: பெகாசஸ் விவகாரத்தில் தொடர்ந்து 8-வது நாளாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - அரசு முறையீடு: குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டுமே அர்ச்சர்களாக நியமிக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருக்கிறது.
கட்டண மீட்டரை மாற்றியமைப்பது குற்றம்: ஆட்டோ, டாக்சியில் பயணிக்கும் பொதுமக்களிடம் மோசடியாக அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும், கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்திருக்கிறது.
அரசு பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஒரு லட்சம் பேர் சேர்ந்திருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
ரவிச்சந்திரனுக்கு பரோல் குறித்து நீதிமன்றம் கேள்வி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது.
கொரோனா பாதிப்பை ஆய்வுசெய்ய மத்திய குழு: கேரளாவில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியிருக்கிறது.
ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிச்சென்ற மூவருக்கு தூத்துக்குடி காவல்துறை வலை விரித்திருக்கிறது.
மாணவர் சேர்க்கை குறித்த வழக்கு தள்ளுபடி: பிளஸ் டூ மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்காக எழுதும் தேர்வின் முடிவுகள் வரும் வரை கல்லூரி சேர்க்கைக்கு தடைகோரிய மனுவை மனுதாரருக்கு பாதிப்பு இல்லை என்பதால் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
ஆட்டுச் சந்தையில் குவிந்த மக்கள்: திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் மக்கள் குவிந்தனர். தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனவே வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
சிந்து, சதீஷ்குமார் கால் இறுதிக்கு முன்னேற்றம்: ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து. குத்துச்சண்டை 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் கால் இறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறார்.
அமெரிக்காவில் நிலநடுக்கம் - குலுங்கிய வீடுகள்: அமெரிக்காவின் அலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. நிலஅதிர்வு 8.2 ரிக்டர் என பதிவான நிலையில் மக்கள் அலறியடித்து ஓடினர்.