3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
சூறைக்காற்றுடன் மழை - மரங்கள் சாய்ந்தன: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 6ஆவது நாளாக சூறைக்காற்றுடன் மழை பெய்துவருகிறது. சாலையில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு: புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருக்கிறார். கொரோனா பரவும் சூழல் இருப்பதாக பெற்றோர் அச்சம் தெரிவித்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆங்கிலேயர் கால தேசத்துரோக சட்டம் தேவையா?: ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட தேசத்துரோக வழக்கிற்கான சட்டப்பிரிவு தற்போது தேவையா? எனவும் விசாரணை அமைப்புகள் இந்த சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்றும் உச்சநீதிமன்றம் சாடியிருக்கிறது.
நீட் விலக்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு: டெல்லி சென்றுள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தார். நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என கோரி மனு அளித்தார்.
இந்திய வரைபடத்தை கிழிக்க முயற்சி - கமல்: இந்திய வரைபடத்தை கிழிக்க முயற்சிப்பதை தடுக்க வேண்டும் என கொங்குநாடு குறித்த சர்ச்சை எழுந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஸ்டெர்லைட் வழக்கு - 22ஆம் தேதி விசாரணை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் 6 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது. இந்த மனு வரும் 22ஆம் தேதி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பைக்கில் கண்ணாடியை அகற்றினால் வாரண்டி தராதீர்: இருசக்கர வாகனங்களில் ரியர்வியூ கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி இல்லை என எச்சரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க போக்குவரத்து ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கோவாக்சின் தடுப்பூசி- 2ஆம் தவணைக்கு முன்னுரிமை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரப்படுத்தப்பட்டிருக்கிறது. குறைந்த அளவே கோவாக்சின் உள்ளதால் டோக்கன் கிடைக்காமல் பலர் ஏமாற்றமடைந்து வருகின்றனர். .
உட்கட்சி தேர்தல் - அவகாசம் கேட்கும் அதிமுக: உட்கட்சி தேர்தலை நடத்த அதிமுக டிசம்பர் வரை அவகாசம் கேட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. அதிமுகவை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.
வளர்ச்சித்திட்டங்களுக்காக இயற்கையை அழிக்காதீர்: இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
டோக்கியோ நட்சத்திர விடுதி ஊழியர்களுக்கு கொரோனா: டோக்கியோவில் ஒலிம்பிக் வீரர்கள் தங்கும் நட்சத்திர விடுதி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் வீரர்கள் தங்குவதற்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.