விரைவுச் செய்திகள்: 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்| 150 பள்ளிக்குழந்தைகள் கடத்தல்

விரைவுச் செய்திகள்: 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்| 150 பள்ளிக்குழந்தைகள் கடத்தல்

விரைவுச் செய்திகள்: 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்| 150 பள்ளிக்குழந்தைகள் கடத்தல்
Published on

மத்திய அமைச்சருக்கு ஆளுநர் பதவி: கர்நாடகா, மிசோரம், கோவா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மத்திய அமைச்சராக உள்ள தாவர்சந்த் கெலாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒளிப்பதிவு மசோதா - முதல்வர் வலியுறுத்தல்: ஒன்றிய அரசின் வரைவு ஒளிப்பதிவு மசோதாவை திரும்பப்பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திருத்த மசோதா கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளதாக மத்திய அமைச்சருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

மேகதாது, மார்கண்டேய அணை -மத்திய அமைச்சர் உறுதி: மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணைக் கட்டிய பிரச்னைக்கு தீர்வுகாண நடுவர் மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தை கேட்காமல் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்றும் மத்திய அமைச்சர் செகாவத் உறுதியளித்ததாக துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.

காவிரி தண்ணீர் - விவசாயிகள் கோரிக்கை: மேட்டூரில் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், தமிழகத்துக்கான தண்ணீரை கர்நாடகாவிடம் பெற வேண்டும் என அரசுக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'பப்ஜி' மதன் மீது குண்டர் சட்டம்: ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட வழக்கில் சிறையில் இருக்கும் 'பப்ஜி' மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இந்நடவடிக்கையை எடுத்துள்ளார்.

சிதம்பரம் - ஆனி திருமஞ்சன விழா தொடக்கம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா தொடங்கப்பட்டது. கொடியேற்ற நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

தடுப்பூசி தேவை - நாளை மறுநாள் பேச்சு: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதால் நாளை மறுநாள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

காலாவதியான பொருட்கள் - எச்சரிக்கை: காலாவதியான பொருட்கள் ரேஷன் கடைகளில் இருந்தால் ஆய்வு செய்யும் அதிகாரியே பொறுப்பு என மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மண்டை ஓடுகளை வைத்தபடி விவசாயிகள் மறியல்: மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க கோரிக்கைவைத்து திருச்சியில் கைகளில் மண்டை ஓடுகளை வைத்தபடி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

3ஆவது நாளாக தாக்குதல் - மீனவர்கள் வேதனை: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் 3ஆவது நாளாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. வலைகளை வெட்டி வீசியதால் பல லட்சம் ரூபாய் இழப்பு என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஓய்வுபெற்ற பின்னும் விடாத லஞ்சம்: தொழில் அதிபர்களிடம் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஐசிஎஃப்-பின் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் கைது செய்யப்பட்டார். பதவியில் இருந்தபோது 3 ஆண்டுகளில் 5 கோடி ரூபாய் வரை கையூட்டு பெற்றது விசாரணையில் அம்பலமானது.

ஒலிம்பிக் போட்டிக்கு மதுரை ரேவதி தேர்வு: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மதுரையை சேர்ந்த ரேவதி வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறுவயதில் 'ஷூ' கூட இல்லாமல் வெறும் காலில் பயிற்சி பெற்றதாக புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

கலப்பு தொடரோட்டத்தில் 3 தமிழக வீராங்கனைகள்: ஒலிம்பிக் கலப்பு தொடரோட்டத்திற்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 3 வீராங்கனைகளும் தமிழர்களே ஆவர். ரேவதியுடன், தனலட்சுமி, சுதா வெங்கடேசன் பங்கேற்க உள்ளனர்.

பள்ளிக்குழந்தைகள் 150 பேர் கடத்தல்: நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் மீண்டும் 150 குழந்தைகள் கடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை - 63 பேர் உயிரிழப்பு: இந்தோனேஷிய மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இரு நாட்களில் 63 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் சோகம் நேரிட்டதாக நிர்வாகத்தினர் விளக்கமளித்துள்ளனர்.

ஸ்பெயினை எதிர்கொள்ளும் இத்தாலி: விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தில் யூரோ கோப்பை கால்பந்து. நள்ளிரவு நடைபெறும் முதல் அரையிறுதியில் இத்தாலியை எதிர்கொள்கிறது ஸ்பெயின்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com