ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். +2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, குழுவில் யாரை இறுதி செய்யலாம் என்பது குறித்தும் ஆலோசனை செய்துவருகின்றனர்.
ரூ.250 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு: சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட 250 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு நடத்தினார்.
தடுப்பூசி -ஆர்வத்துடன் வந்தவர்கள் ஏமாற்றம்: புதுக்கோட்டை, மதுரையில் கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஆர்வத்துடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பொருட்களை வாங்கிச் செல்லும் மக்கள்: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டது. சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் வரிசையில் நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இ-பதிவு பெற்று பயணிக்க அறிவுறுத்தல்: தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் வாகன போக்குவரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இ-பதிவு பெற்று பயணிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தி வருகின்றனர்.
இ-பதிவு இணையதளம் முடங்கியது: சுய தொழில் செய்வோர் அதிகளவில் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது. இணையதளத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்ய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
ஊரடங்கை மீறி நடத்தப்பட்டதா திருவிழா?: தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் ஊரடங்கை மீறி கோயில் திருவிழா நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடந்தது தொடர்பாக வீடியோ வெளியானது.
காவல்துறையினரை தாக்கிய இளைஞர்: கும்பகோணம் அருகே முகக்கவசம் அணியாமல் சென்ற இளைஞரை விரட்டிச் சென்ற போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால் பதிலுக்கு இளைஞரை தாக்கி காவல்துறையினர் கைதுசெய்தனர்.
வாக்குவாதம் இவருக்கு புதிதல்ல: சென்னையில் காவல்துறையினரை திட்டிய பெண் வழக்கறிஞர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்குமுன்னரும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் காவலர்களுடன் வாக்குவாதம் செய்தது அம்பலமானது.
இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 427 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாட்டில் தளர்வா?: கொரோனா தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை சான்று தேவையில்லை என உள்நாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாட்டை விரைவில் தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லட்சத்தீவில் மேலும் சில விதிமுறைகள் அறிவிப்பு: லட்சத்தீவில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மேலும் சில விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மீனவர்களின் படகுகளில், கண்காணிப்புக்காக அரசு அலுவலர்களும் வருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் 90% வீரர்களை மாற்றிய சீனா: இந்திய எல்லையோரம் நிறுத்தப்பட்டிருந்த படை வீரர்களில் 90 சதவிகிதம் பேரை மாற்றிவிட்டு புதிய வீரர்களை சீனா களமிறக்கி உள்ளது. கடுமையான குளிர் மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் வெள்ளம் - 14 பேர் உயிரிழப்பு: இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செரீனா அதிர்ச்சி தோல்வி; ஃபெடரர் திடீர் விலகல்: ஃப்ரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருந்த ரோஜர் ஃபெடரர், தொடரில் இருந்து பாதியில் விலகினார்.