விரைவுச் செய்திகள்: தண்ணீரைத் தருமா கர்நாடகா? | ஐரோப்பிய நாடுகளில் வெள்ளம்

விரைவுச் செய்திகள்: தண்ணீரைத் தருமா கர்நாடகா? | ஐரோப்பிய நாடுகளில் வெள்ளம்
விரைவுச் செய்திகள்: தண்ணீரைத் தருமா கர்நாடகா? | ஐரோப்பிய நாடுகளில் வெள்ளம்
Published on

சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை: சென்னை, திருவள்ளூர், ஈரோடு உட்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

தண்ணீரைத் தருமா கர்நாடகா?: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 5 ஆயிரம் கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூன், ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பாலியல் தொல்லை- புகார் பெட்டிகள் வைக்க உத்தரவு: பாலியல் தொல்லை குறித்து மாணவ - மாணவிகள் அச்சமின்றி புகார் அளிக்க அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்கவேண்டும் எனவும், புகார் பெட்டிகள் வைக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வலியுறுத்தல்: பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

நிரந்தர கட்டுமானங்கள் தேவை - உயர் நீதிமன்றம்: பருவம் தவறி பெய்யும் மழையால் நெல் மூட்டைகள் வீணாவதை தடுக்க நிரந்தர கட்டுமானங்கள் தேவை எனவும், நேரடி அரசு கொள்முதல் நிலையங்களை அமைக்குமாறும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

மாணவர் சேர்க்கை - யுஜிசி உத்தரவு: முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணமா? - ஆய்வுக்கு உத்தரவு: அரசுப் பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில் 10,000 பக்தர்களுக்கு அனுமதி: சபரிமலையில் இனி 10,000 பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்திருக்கிறது. தரிசனத்திற்கான முன்பதிவு உடனே தொடங்குவதாகவும் அறிவித்திருக்கிறது.

மீனவர்கள் போராட்டம்: சுருக்குமடி வலைக்கு அனுமதிகோரி கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் தலைமறைவு: சிவசங்கர் பாபாவின் பாலியல் குற்றங்களுக்கு உதவி செய்ததாக கூறப்படும் ஆசிரியைகள் தலைமறைவாகி உள்ளனர். சம்மன் கொடுக்க சென்றபோது வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடியவர்களை சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் 2,205 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தஞ்சை, திருப்பூர், கடலூரில் தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் அதிகரித்திருக்கிறது.

பெண்ணுடன் தகராறு - சிறப்பு எஸ்.ஐ கைது: கோவையில் தகராறில் ஈடுபட்டு வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த சிறப்பு எஸ்ஐ கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள் வருகை: தமிழகத்திற்கு மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

65 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம்: வரும் டிசம்பர் மாதம் வரை கூடுதலாக 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. கோவிஷீல்டு தடுப்பூசி 205 ரூபாய்க்கும், கோவாக்சின் தடுப்பூசி 215 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜினாமா செய்யவில்லை - எடியூரப்பா: ராஜினாமா செய்ததாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கமளித்திருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை: தமிழகத்தில் இரண்டு மாதங்களில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திய நிலையில், அதிமுக ஆட்சிக்காலத்தை விட தினசரி ஒரு லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக செலுத்தப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்திருக்கிறார்.

கட்சி தலைமை எடுக்கும் முடிவு ஏற்புடையது: கட்சி தலைமை எடுக்கும் எந்த முடிவும் அனைத்து தரப்புக்கும் ஏற்புடையதே என நவ்ஜோத் சிங் சித்துவுடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் பேட்டியளித்திருக்கிறார்.

பிரதமரை சந்தித்த சரத் பவார்: பிரதமர் மோடியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திடீர் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் நடந்த சந்திப்பால் அரசியல் களத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

2 நவீன ஹெலிகாப்டர்களை வழங்கிய அமெரிக்கா: இந்தியாவுக்கு இரண்டு அதி நவீன ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கியது. பாதுகாப்பு துறையில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் வெள்ளம்: ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஒலிம்பிக்கை அச்சுறுத்தும் கொரோனா: டோக்கியா ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதியானது.போட்டிகள் தொடங்க சில நாட்கள் உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com