தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்ணில் 50 விழுக்காடும், 11ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 20 விழுக்காடும், 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30 விழுக்காடும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
விருப்பப்படுவோருக்கு தேர்வெழுத வாய்ப்பு: மாணவர்கள் விரும்பினால் பிளஸ் டூ தேர்வை எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார். கொரோனா தொற்று குறைந்தபிறகு தனித்தேர்வர்களுடன் சேர்ந்து தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
நீட் தேர்வு நடத்தப்படுமா? - இபிஎஸ்: தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுமா? என முதலமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
100% நீட் ரத்து செய்யப்படும் - மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் நீட் தேர்வு நூறு சதவிகிதம் ரத்து செய்யப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
திங்கள் முதல் 9,333 பேருந்துகள் இயக்கம்: திங்கள் முதல் 27 மாவட்டங்களில் 9 ஆயிரத்து 333 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, தென் மாவட்டங்கள் இடையே மீண்டும் அரசுப் பேருந்து சேவை தொடங்குகிறது.
மக்களுக்கு சேவை செய்ததால்தான் நஷ்டம்: மின்துறையில் ஊழல் என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்று அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார். பொதுமக்களுக்கு சேவை செய்ததால் தான் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
20 மாவட்டங்களில் பெட்ரோல் சதம்: தமிழகத்தின் 20 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. சென்னையிலும் ஒரு லிட்டர் 100 ரூபாயை நெருங்குவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆளுநர்களிடம் மனு அளித்த விவசாயிகள்: மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களை சந்தித்து விவசாயிகள் மனு அளித்தனர். சண்டிகரில் மனு அளிக்கச் சென்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர் - நீர் திறப்பு 15,000 கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் அரசு நடடிவக்கை மேற்கொண்டுள்ளது.
அதிக நாடுகளில் பரவிய டெல்டா வகை கொரோனா: இந்தியாவில் உருமாற்றம் பெற்ற டெல்டா வகை கொரோனா வைரஸ்தான், அதிக நாடுகளில் பரவியது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
21 மாவட்டங்களில் 100க்கு கீழ் பாதிப்பு: தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 21 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை100க்கு கீழ் குறைந்தது.
காயங்களுடன் பிடிபட்ட சிறுத்தை உயிரிழப்பு: பழனி அருகே காயமுற்ற நிலையில் பிடிபட்ட சிறுத்தை சிசிச்சை பலன் இன்றி உயிரிழந்தது. காட்டுப்பன்றி தாக்கியிருக்கக்கூடும் என வனத்துறை கூறியுள்ளது.
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.