எது பெண் சுதந்திரம் தெரியுமா? - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேச்சு

எது பெண் சுதந்திரம் தெரியுமா? - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேச்சு
எது பெண் சுதந்திரம் தெரியுமா? - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேச்சு
Published on

பெண்களுக்கு எவ்வளவு பிரச்னை வந்தாலும் தற்கொலை என்ற முடிவை எடுக்கக் கூடாது என்றும் பெண்கள் தங்களது பிரச்னைகளை கூறும் வகையில் அமைப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் ஊடக பயிற்சி முகாமை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் துவக்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, மார்ச் 8 மட்டுமின்றி அனைத்து தினமுமே பெண்களுக்கான தினம் என்பதால், அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்றார்.

''மற்ற மாநிலங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், தமிழகத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வளவு தடைகள் போட்டாலும், அதனை உடைத்து எறிந்து மேலே வர வேண்டும் என்பது தான் என்னோடு விருப்பம். பெண்களுக்கு மட்டுமே வீட்டிற்கு சீக்கிரம் வர வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆண்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தால் தான் பெண்களிடம் அவர்கள் சரியாக நடந்து கொள்வார்கள்.

அதேபோல் பெண்ணுரிமை எது என்று நாம் நினைப்பதில் தான் பிரச்னை ஏற்படுகிறது. நாகரீக உடைகள் உடுத்துவதில் கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் உடை அணிய கூடாது. உடையில் கட்டுப்பாடு என்பது இருக்க வேண்டும். நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று செய்வதற்கு சுதந்திரம் இருக்கிறது என்பது போல், மற்றவர்களுக்கும் அதே சுதந்திரம் உள்ளது என்பதை உணரவேண்டும்.

எனவே நன்றாக படிக்க வேண்டும், சாதனை செய்வேன், மேலும் வளர்ச்சி அடைவேன் என்பது தான் உரிமையே தவிர, என் இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண் உரிமை இல்லை. எவ்வளவு பிரச்னை வந்தாலும் தற்கொலை தீர்வு என்பது தீர்வல்ல. பெண்கள் அதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்க கூடாது. பெண்களின் பாதை எப்போதும் மலராக இருக்காது, கல்லும் முள்ளும் உள்ள பாதையாக தான் இருக்கும். அதை தான் கோட்டையை அடையும் எண்ணத்தை பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.

பெண்கள் ஒரு இரும்பு போன்றவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு ஆண் கையில் இருக்கும் பணத்தை விட, பெண் கையில் பணம் இருந்தால் அந்த வீடே பயன்பெறும். ஆண்கள் பெண்களை மதிக்க கற்று கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் பாலியல் தற்கொலைகள், தொந்தரவுகள் வரக்கூடாது என்பது தான் தனது விருப்பம். தன்னிடம் வந்து உதவி கேட்டு வரும் பெண்களுக்கு எப்போதும் என்னுடைய அலுவலக கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும்'' என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com