'எய்ம்ஸ் கட்ட காலதாமதமாகிறது என்பதில் பிரச்னை இல்லை; ஏனென்றால்...'- தமிழிசை விளக்கம்

'எய்ம்ஸ் கட்ட காலதாமதமாகிறது என்பதில் பிரச்னை இல்லை; ஏனென்றால்...'- தமிழிசை விளக்கம்
'எய்ம்ஸ் கட்ட காலதாமதமாகிறது என்பதில் பிரச்னை இல்லை; ஏனென்றால்...'- தமிழிசை விளக்கம்
Published on

“ஆளுநர்களுக்கு வாய் இருக்கிறதா காது இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஆளுநர்களுக்கு நல்ல இதயம் இருக்கிறது” என்று பேசியுள்ளார் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன்.

சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “எனக்கும் இந்த மருத்துவமனைக்கும் ஏறத்தாழ 35 ஆண்டுகள் தொடர்ப்பு இருக்கிறது. இந்த மருத்துவமனை ஆளாக்கிய நபர்களில் நானும் ஒருவர். இந்த மருத்துவமனைக்கு என் சிறிய பங்கு உள்ளது. மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாகும் போதும் என் பங்கு இருந்தது. மருத்துவமனைகள் என்பது, செங்கலால் கட்டப்படுவது இல்லை; இதயத்தால் கட்டப்படுகிறது. ஆகவே மருத்துவமனைகள் கட்ட கால தாமதம் ஆகலாம்.

தமிழில் மருத்துவப்படிப்பு படிக்க நம் பிரதமர் வழிவகை செய்துள்ளார். 24 மணி நேர ரத்த வங்கி இங்கே செயல்படுகிறது. மேலும் 76 மருத்துவமனைகள் திட்டமிடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்ட காலதாமதம் ஆகிறது என்பதில் பிரச்னை இல்லை. ஏனென்றால் எய்ம்ஸ் என்றால் ஏதோ 4 ,5 படுக்கைகள், 5 துறைகள் கிடையாது. உலகதரம் வாய்ந்த மிகப் பிரமாண்டமான மருத்துவமனை அது. எனவேதான் இவை எல்லாம் ‘செங்கலால் கட்டப்படவில்லை, இதயத்தால் கட்டப்படுகிறது’ என்று சொன்னேன். மருத்துவர்களின் இதயத்தால், ஆட்சியாளர்களின் இதயத்தால் நோயாளிகளின் இதயம் காப்பாற்றப்பட வேண்டும்.

பிரதமரின் 9,000 ‘மக்கள் மருந்தகங்கள்’ இந்தியா முழுவதும் திறக்கப்பட்டு உள்ளது. மருந்தின் விலை தெரியாமல் நாம் (மருத்துவர்கள்) மருந்துகளை எழுதுகிறோம். என் கணவர் மருத்துவர் சௌந்தரராஜன், எப்போதும் குறைவான விலை உள்ள உள்ள மருந்துகளை விசாரித்து அதையே நோயாளிகளுக்கு எழுதுவார். ஏனெனில் இப்போதெல்லாம் ரத்த அழுத்தத்துக்காக மருந்துகள் வாங்கினால் அதன் விலையை பார்த்தே அழுத்தத்துக்காக எகிறிவிடும் போல! வயிற்று எரிச்சலுக்கான மாத்திரையின் விலையைக் கேட்டால் வயிற்று எரிச்சல் அதிகமாகிவிடும் போல.

மருத்துவமனைகள் கட்டப்படும் காலம் பெரியது அல்ல. எவ்வளவு பிரமாண்டமாக, எவ்வளவு நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக கட்டப்படுகிறது என்பதுதான் முக்கியம். இந்த மருத்துவமனை மூலம் மத்திய அரசு தொழிலாளர்களுக்கு பார்த்து பார்த்து சேவை செய்கிறது. இந்த மருத்துவமனையின் டீன் இந்த மருத்துவமனைக்கு நிறைய விஷயங்களை கொண்டுவந்துள்ளார். இவர் (டீன்) நம் மாநிலத்தை சேர்ந்தவர் அல்ல; மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் நம் மாநிலத்தை புரிந்துகொள்ள முடியும்; நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வேறு மாநிலத்தை புரிந்துகொள்ள முடியும். இதுதான் இந்தியாவின் இறையாண்மை. ஆனால் சிலரின் கவனக்குறைவால் இந்த சகோதரத்துவம் துண்டுதுண்டாக ஆகிக்கொண்டு இருப்பதை நாம் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது.

ஏனென்றால் இங்கே தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார். கேரளாவைச் சேர்ந்தவருக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவர் சிகிச்சை அளிக்கிறார். ஒன்றாக பார்க்குக் போது ரத்தமும் ஒன்றுதான், இந்த சத்தமும் ஒன்றுதான், இந்த குரலும் ஒன்றுதான். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாருடைய ரத்தமும் சிவப்புதான். ஆனால் இந்தியாவின் ரத்தம் தேசப்பற்றோடு உள்ள ரத்தம்.

‘எனக்கு சாதியில்லை; சாதி ஒழிப்புதான் என் வேலை’ என பேசிவிட்டு ‘நான் உங்கள் சாதி. எனக்கு ஓட்டு போட்டுவிடுங்கள்’ என்கிறார்கள். இதுதான் நடக்கிறது. நல்ல சேவை செய்பவர்களை மக்கள் புரிந்து கொள்ளுங்கள். மருத்துவர்களுக்கு இதயம் இருப்பது போல் தான் ஆளுநர்களுக்கும் இதயம் இருக்கிறது. ஆளுநர்களுக்கு வாய் இருக்கிறதா காது இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஆளுநர்களுக்கு நல்ல இதயம் இருக்கிறது.

நீட்டை ஆதரித்து சில நேரங்களில் நான் கருத்து சொல்லும் போதும் சமூக வலைதளங்களில் என்னை பார்த்து நிறைய சொல்லுவார்கள். ஆனால் ஒரு அரியர் கூட இல்லாமல் மருத்துவப்படிப்பை படித்தவர் நான். மக்களுக்கு சேவை செய்வதுதான் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பவர் நான். எல்லாரும் காலையில் யோகா செய்யுங்கள். யோகா செய்தால் மருத்துவமனைக்கு வர வேண்டாம். சிறுதானியங்களை நிறைய சாப்பிடுங்கள். மாமியாராக இருந்தாலும், மருமகளாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்'' என்றார்.

முன்னதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அவசரகால வார்டை திறந்து வைத்தார் தமிழிசை செளந்தரராஜன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com