செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி ஆய்வுக் கூட்டம் அம்பத்தூர் அருகே சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிர்வாகிகள் மற்றும் பாஜக சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட பொன்.பாலகணபதி உள்ளிட்டோரிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த அவர், “கள்ளச்சாரய பிரச்னையை மறக்கடிப்பது போல் தமிழக அரசு நடந்து கொள்கிறது. சட்டமன்ற கூட்டம் முடிந்த பிறகும், முதல்வர் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்க்கவில்லை. இது போன்ற பிரச்னை பிற மாவட்டங்களிலும் இருக்கிறதா என்பதை சென்று பாருங்கள் என்று கோரிக்கை வைத்தேன். அதையும் செய்யவில்லை. இன்று பல இடங்களில் மெத்தனால் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடிக்கும் போது மிகுந்த வேதனை அளிக்கிறது. சிபிஐ விசாரணை வேண்டாம் என ஆணவமாக கூறுகின்றனர்.
சட்டமன்றத்தில் கூட கேலி கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர். மக்களை பற்றி யாரும் கவலைப்படவில்லை. திராவிட அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கள்ளச்சாராய பிரச்னை சாதாரண பிரச்னை அல்ல. மிக கொடூரமான பிரச்னை. அதை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். கண்டிப்பாக சிபிஐ விசாரணை வேண்டும். தற்போது எடுத்துள்ள நடவடிக்கை போதுமானதாக இல்லை. இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய் கூட பட்டப்படிப்பு படிக்கலாம் என்கிறார்கள். திமுகவில் எவ்வளவு பேர் படித்து இருக்கின்றனர்? தனிமனித உழைப்பை கூட இவர்கள் சுரண்டி ‘எங்களால்தான் எல்லாம்’ என்று சொல்லும் மோசமான நிலை இன்று உள்ளது. என்ன வேண்டுமானாலும் பேசலாம் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற நிலைதான் திமுகவில் உள்ளது.
தம்பி விஜய் மாற்று அரசியலை முன்னெடுப்பார் என நினைத்தோம். அவரும் திமுகவை போல் பேசினால், அவருக்கு பெரிய வாய்ப்பில்லை. மக்கள் மாற்று அரசியலைதான் எதிர்பார்க்கின்றனர்.
நீட் குறித்து விஜய் பேசியது பெரிய ஏமாற்றமே. நீட் குறித்து அவர் பேசியது தவறு. அதை அவர் உணர வேண்டும். மாணவர்களை பலவீனப்படுத்தும் கருத்தை ஏன் விஜய் பேசினார் என அங்கிருந்த பெற்றோர் வருந்துவதை என்னால் பார்க்க முடிந்தது” என்று தெரிவித்தார்.