தெலுங்கானாவில் எம்.எல்.ஏ.க்களை பாஜக வாங்க முயற்சித்தது குறித்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்ட ஆதாரங்கள் உண்மையில்லை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மார்பக புற்றுநோயை கண்டறியும் நவீன இயந்திரத்தை சேவைக்காக அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ''தமிழகத்தில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நான் பயனுள்ள நிகழ்ச்சியில் மட்டுமே கலந்து கொள்வேன். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டுள்ளேன். 4 நிமிடத்திற்கு ஒருவர் புற்றுநோயால் பரிசோதனைக்கு வருகிறார்கள். 15 நிமிடத்திற்கு ஒருவர் புற்று நோயால் இறக்கிறார்கள். மிக ஆரம்ப நிலையில் புற்று நோயைக் கண்டு பிடிக்க பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்'' என்று அறிவுறுத்தினார்.
கர்நாடகாவில் ஆதார் கார்டு இல்லை என்று ஒரு கர்ப்பிணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, "எந்த இடத்தில் சிகிச்சை மறுக்கப்பட்டாலும் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். மேலும், பெண்மணியை மருத்துவமனையில் அனுமதிக்காத சூழ்நிலை வருத்தம் அளிக்கிறது. அது எந்த அரசாக இருந்தாலும் அதை சரி செய்ய வேண்டும்" என்றார்.
தெலுங்கானாவில் தெலுங்கு ராஷ்டி சமிட்டி எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சி செய்தது குறித்த ஆதாரங்களை சந்திரசேகர ராவ் வெளியிட்டது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "வெளியிடும் ஆதாரங்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அதில் எனக்கு கருத்து சொல்ல விருப்பமில்லை" என்றார்.
"அதனுடன் திமுக கூட்டணிகளின் ஆளுநரை திரும்பப் பெறுவது குறித்தான கையெழுத்து ஆளுநரின் தலையெழுத்தை மாற்றுமா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஆளுநர் கருத்தே தெரிவிக்க கூடாது என கருத்து உரிமையை இவர்கள் மறுக்கிறார்கள். அவர்கள் கையெழுத்து வாங்குவது அரசியல் ரீதியாக சரி இல்லை" என்றார். மேலும், "நான் தமிழ்நாட்டிலேயே பிறந்தவள், வளர்ந்தவள். தமிழ்நாடு எனது தாய் மண். தமிழகத்தில் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. தமிழகத்தில் தமிழிசைக்கு பேச உரிமை இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது" என தெரிவித்தார்.
வெள்ள பாதிப்புகளை திமுக கையாண்ட விதம் குறித்து கேட்ட கேள்விக்கு, "திமுக தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்து உள்ளது. எனவே சென்னையை திமுக இதற்கு முன்பாகவே சிங்கப்பூர் ஆக மாற்றி இருக்க வேண்டுமே. ஆனால் தற்போது தண்ணீர் தேங்க வில்லை என்பது நல்ல விஷயம்தான்" என தெரிவித்தார்.
முன்னதாக மேடையில் பேசிய தமிழிசை, "புற்றுநோய் சம்பந்தமாக ஒரு சின்ன அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வெட்கப்பட்டு பெண்கள் தள்ளி போடாதீர்கள். ஆண்கள் புடவை, தங்க நகை வாங்குவது போன்று முழு உடல் பரிசோதனை அவரவரது மனைவிக்கு பரிசோதனையும் செய்துகொள்ள உதவுங்கள். பணம் இல்லை என்பதற்காக யாரும் சிகிச்சை இல்லாமல் உதாசீனப்படுத்தப்படக்கூடாது. நோய் இருப்பது தெரிந்த பினபும், மிக முதிர்ந்த நிலைக்கு மார்பக புற்று வந்த பின் உயிரிந்தவர்கள் இங்கு அதிகம். பெண்களின் சேவை குடும்பத்திற்கு முக்கியம். வருடம் வருடம் இந்த பரிசோதனையை அனைவரும் செய்ய வேண்டும். ஆண்கள், தங்கள் மனைவிக்கு, நேசிக்கும் பெண்ணுக்கு ஒரு கிஃப்ட் ஆக மார்பக புற்றுநோய் குறித்த அறிகுறிகள் அறியவும், பரிசோதனை செய்யவும், உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை செய்து கொள்ளவும் சொல்லவும்'' என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
இதையும் படிக்க: நமீபியா சிறுத்தைகள் இரண்டும் ஆரோக்கியத்துடன் இருப்பது மகிழ்ச்சி - பிரதமர் மோடி