ரஜினி வந்தால் மட்டுமே பாஜக பலம் பெறும் என்று கூறவில்லை. ரஜினி வந்தால் பாஜக கூடுதல் பலம் பெறும். ஊழல் இல்லாத நிர்வாகத்தை நடத்த பாஜக தமிழகத்தை ஆள வேண்டும். ஆகவே, அதற்கு தேவையான பலத்தை கூட்டும் முயற்சியில் இறங்குவது என்ன தவறு? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே பேசிய தமிழிசை, “தமிழக அரசில் ஒரு வெளிப்படையான நிர்வாக இல்லை. அதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசின் அமைச்சர்கள் தங்களுடைய 3 ஆண்டு சாதனைப் பட்டியலை வெளியிட்டதைப் போல, தமிழக அமைச்சர்களை தங்களின் ஓராண்டு சாதனைப் பட்டியலை வெளியிட செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு இன்னும் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவு இருக்கிறது என்று தெரியும். ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். டாஸ்மாக் கடையை எதிர்த்துப் போராடும் மக்களை ஒடுக்குவது கண்டிக்கத்தக்கது” என்றார்.
மேலும், “காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தங்களுடைய கட்சி என்ன செய்கிறது என்பதைப் பார்க்காமல் பாஜக என்ன செய்கிறது, அதிமுக என்ன செய்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். ரஜினி தனிக்கட்சிதான் ஆரம்பிப்பார். பாஜகவில் சேர மாட்டார் என்று திருநாவுக்கரசர் ஆருடம் சொல்கிறார். பாஜக கூட்டணிக்காக ஏங்கவில்லை. தேவைப்பட்டால் நாங்கள் கூட்டணி அமைப்போம். ரஜினி வந்தால் மட்டுமே பாஜக பலமாக இருக்கும் என்று சொல்லவில்லை. ரஜினி வந்தால் கூடுதல் பலமாக இருக்கும். தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாக வேண்டும். அதற்காக நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு தேவையான பலத்தை கூட்டும் முயற்சியில் இறங்குவது என்ன தவறு? ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் ஆகியோர் ரஜினி பாஜகவுக்கு போகக்கூடாது என்கிறார்கள். இவர்களுக்கு ஏன் இவ்வளவு பதற்றம் என்பதுதான் தெரியவில்லை” என்று கூறினார்.
“விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. திமுக ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள். மெட்ரோ ரயில் திட்டம், ஜல்லிக்கட்டு ஆகியவற்றுக்கு தேவையானதை செய்து திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த உதவியது பாஜக அரசுதான். எங்களுடைய 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சிகள் வரும் 26 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். பல மத்திய அமைச்சர்கள் இவ்விழாக்களில் கலந்து கொள்ள உள்ளனர்” என்று தமிழிசை கூறினார்.