EXCLUSIVE ; “அந்த அளவிற்கு நொந்து போனேன்; நோகடித்த மனிதர் ரஜினிகாந்த்” - தமிழருவி மணியன் நேர்காணல்
உங்களது 56 ஆண்டு கால கனவை நிறைவேற்றுவதற்கு அண்ணாமலையுடன் சேர்ந்துள்ளீர்களா?
நான் விஜயகாந்தை முதலமைச்சராக்குவேன் என சொல்லியுள்ளேனா. நான் சொன்ன ஒரே தலைவர் வைகோ. அதுவும் ஏன் சொன்னேன். அவர் என் வீட்டிற்கே வந்து, கடைசிவரை திமுக அதிமுகவை எதிர்த்து தான் அரசியல் செய்வேன் என்றார். வைகோ மேல் பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் இல்லை. இயற்கையிலேயே போராட்ட குணம் கொண்டவர். மக்களுக்காக எந்த பிரச்சனை வந்தாலும் களத்தில் நிற்கக்கூடியவர். அதனால் அவர் தகுதியானவர் என நினைத்தோம். அதனால் அவரை முதல்வர் என சொன்னேன். அது சரியாக இல்லை. அவர் சேரக்கூடாத இடத்தில் மீண்டும் சேர்ந்து கொண்டார். விஜயகாந்த் போன்றோரெல்லாம் மக்கள் நலன் கூட்டணி உருவாக்கினார்கள்.
வைகோவிற்கு பின் ரஜினியின் அரசியல் வருகையை ஆதரித்தீர்களே?
இனிமேல் ரஜினியைப் பற்றி ஒரு வார்த்தையை பேச விரும்பவில்லை. நானா ரஜினி வீட்டிற்கு சென்றேன். நான் உள்ளே சென்றதும் அவரிடம் கேட்டேன். உண்மையாகவே அரசியலுக்கு வர ஆசைப்படுகிறீர்களா என கேட்டேன். அதற்கு நிச்சயமாக வருவேன் என்றும் அது என் மனச்சான்று எனக்கிட்ட கட்டளை என்றும் சொன்னார். அவர் என்னிடம் பேசும்போது அப்போதே சொன்னார். நான் முதலமைச்சர் இல்லை என்றார். அதற்கு அவரிடம் சொன்னேன். 40, 45 வயதுடைய இளைஞரை முதலமைச்சர் ஆக்குங்கள் என்றேன். அவர் அதையெல்லாம் ஒழுங்காக செய்தார். மூன்று ஆண்டுகள் முறையாக திட்டமிட்டு திரும்ப திரும்ப பேசி எதையெல்லாம் சீர் படுத்த வேண்டுமோ அதை எல்லாம் செய்தார். இங்கிருந்து அவர் அண்ணாத்தே படத்திற்கு படப்பிடிப்பிற்கு போகும் வரை எல்லாம் முறையாகத்தான் இருந்தது. அடுத்து என்ன ஆனதென்று ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
எம்ஜிஆர் அழைத்தும் நான் போகவில்லை. சிவாஜி கட்சியில் சேர்ந்த போது நான் அதிலிருந்து வெளியில் வந்துவிட்டேன். ஆனால் நீங்கள் அழைத்து நான் ஏன் வந்தேன் என்றால் சிஸ்டம் கெட்டுவிட்டது என சொல்கிறீர்கள். நானும் முயன்று பார்த்துவிட்டேன். 20% வாக்குகளாவது உங்கள் பின்னால் இருப்பவர்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். அதனால் நல்லாட்சி தருவதற்கான தேர்தல் அறிக்கையை உருவாக்கினால் அதன் மூலமாக இன்னும் கூடுதலான இடத்தை பெற முடியும். இதுக்காத்தான் நான் வந்தேன் என அவரிடம் சொன்னேன்.
அவர் அரசியல் வேண்டாம் என முடிவெடுத்த போது அவரிடம் நான் சொன்னேன், “மூன்றாண்டுகள் உங்களை தோளில் சுமந்தவன். ஆனால் இன்று திடீரென்று அரசியல் இல்லை என்கிறீர்கள். உங்களால் என் நம்பகத்தன்மையே போய்விட்டது. நான் எந்த முகத்தோடு மக்களை சென்று பார்ப்பேன். நீங்கள் அறிவித்த 24 மணி நேரத்தில் நானும் அறிவிப்பேன் என சொல்லி அறிவித்தேன். அந்த அளவிற்கு மனம் நொந்து போனேன். அதை நோகடித்த மனிதர் அவர்.
முழு பேட்டியையும் காண செய்தியில் உள்ள காணொளியை காணவும்.