தவெக மாநாடு
தவெக மாநாடுபுதிய தலைமுறை

தவெக முதல் மாநில மாநாடு: கொள்கை, கோட்பாடு முதல் விஜய் பேச்சு வரை... முழு விவரம்!

தவெக முதல் மாநாடு கொண்டாட்டத்துடன் வி.சாலையில் தொடங்கியுள்ள நிலையில், நிகழ்ச்சி தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் இங்கே காணலாம்...

விஜய் மாநாடு முழு வீடியோ:

தொடங்கியது மாநாடு:

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு தொடங்கியது. தொண்டர்களின் ஆர்ப்பரிப்புடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலுடன் மாநாடு தொடங்கியுள்ளது. சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு வர இருக்கிறார் தலைவர் விஜய். நிகழ்ச்சி தொடங்கியதை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...

தவெக செயல்திட்டத்தில் இருமொழிக்கொள்கை?

தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்திட்டத்தில் இருமொழிக்கொள்கை இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் உள்ளிட்டவையும் செயல் திட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்

மாநாட்டு மேடைக்கு வந்தபோது, விஜய் ரேம்ப் வாக் சென்றார். அச்சமயத்தில் அவரை நோக்கி கட்சித் தொண்டர்கள் கட்சி துண்டை வீசினார். அதை கையிலெடுத்த விஜய், கொண்டாட்டத்துடன் அதை தன் தோளில் அணிந்துகொண்டு நடந்தார்! அக்காட்சிகள் இங்கே...

தமிழக மாநாட்டு மேடைக்கு உற்சாகமாக வந்துள்ளார் விஜய்.. அதை இங்குள்ள வீடியோவில் காணலாம்!

தவெக மாநாடு
தவெக மாநாடு: மேடைக்கு வந்தார் விஜய்... Ramp Walk-ல் ஆர்ப்பரித்த தொண்டர்கள்..!

தியாகிகளுக்கு மரியாதை

தியாகிகளுக்கு மரியாதை
தியாகிகளுக்கு மரியாதை

ராம்ப் வாக்கை முடித்துக்கொண்டு மேடைக்கு வந்த விஜய் தொண்டர்களின் உற்சாகத்தைக் கண்டு கண்கலங்கினார். தமிழ்நாட்டின் மன்னர்களுக்கும், சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கொடியேற்றினார் விஜய்

கொடியேற்றினார் விஜய்
கொடியேற்றினார் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றினார் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி

நமது நாட்டின் விடுதலைக்காவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து வீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதும், இறையான்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன்.

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து சமூக நல சேவகராக கடமையாற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் கலைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப்பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்” - என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது!

“நான் வரேன்” - விஜய்

“திருவள்ளுவர் வழியில், கொள்கைத் தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் போன்றோரை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று, பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளுடன் தமிழக வெற்றிக்கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்க ‘நான் வரேன்’...” - என்று கூறியுள்ளார் விஜய்

தவெக கோட்பாடு:

மக்கள் யாவரும் பிறப்பால் சமமே... பாரபட்சமற்ற சமநிலைச் சமூகம் படைப்பதே கோட்பாடு...

தவெக குறிக்கோள்:

மதம், சாதி, நிலம், இனம், பாலின அடையாளம், பொருளாதாரம் என்கிற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தை சுருக்காது தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் தனிமனித, அரசியல், பொருளாதார உரிமைகளை நிலை நிறுத்தி எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்குவது தவெக குறிக்கோளாகும்.

தவெக கொள்கைகள்:

“ஒரு நாட்டின் மக்களை அவர்கள் சார்ந்த இடம், மொழி, சாதி, பாலினம் என பிரித்து பாகுபடுத்தாமல் சம உரிமைகளை அவர்களுக்கு உத்தரவாதப்படுத்தி சாத்தியப்படுத்துவது.

ஆட்சியதிகாரம், சட்டம், நீதி அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தி வெகுஜன மக்களின் அடிப்படை சுதந்திர உரிமைகளை பறிக்கும் மாநில, ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவது”

தவெக செயல் திட்டம்..:

  • அரசை மக்கள் எளிதில் அணுக மதுரையில் தலைமைச் செயலக கிளை அமைக்கப்படும்.

  • சமதர்ம, சமநீதிக்கு எதிரான வர்ணாசிரம கோட்பாட்டுக்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாசார இடப்பங்கீடு அளிக்கப்படும்.

  • தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை மட்டுமே தமிழ்நாட்டுக்கு ஏற்றக்கொள்கை

  • தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி.

  • தமிழ்மொழியில் கற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை

ஆளுநர் பதவி அகற்ற வலியுறுத்தப்படும்

“எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாக இருப்பதால், ஆளுநர் பதவி தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.. மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்..

அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும்” - என்று தவெக செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேசத்தொடங்கினார் விஜய்...

மாநாட்டில் தன் உரையை தொடங்கியுள்ளார் விஜய். தொடங்கியவுடன், ‘ஒரு குழந்தையை பெற்றவுடன் தாய்க்கு ஏற்படும் உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது’ எனத் தொடங்கி பேசத்தொடங்கினார். அவரது உரையை, இங்கே காணலாம்...

“அரசியலுக்கு நாம குழந்தைதான்.. ஆனா பாம்பா இருந்தாலும் பயமில்ல”

“ஒரு குழந்தை முதன்முதலாக அம்மா என சொல்லும்போது அம்மாக்கு ஒரு சிலிர்ப்பு வரும். சிலிர்ப்பு எப்படி இருந்தது என அம்மாவால் சொல்ல முடியும். அந்த உணர்வு எப்படி இருந்தது என குழந்தையைக் கேட்டால் அந்த குழந்தை எப்படி சொல்லும். குழந்தைக்கு சிரிக்க மட்டும்தானே தெரியும்.. சிலிர்ப்பை சிலாகித்து வார்த்தைகளில் சொல்ல அந்தை குழந்தைக்கு தெரியாதில்லையா.. அப்படி ஒரு உணர்வோடுதான் நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.

அம்மாவிடம் கூட தன் உணர்வை சொல்லத்தெரியாத குழந்தை முன் பாம்பு ஒன்று படமெடுத்தால் என்ன நடக்கும்.. தன் அம்மாவைப் பார்த்து சிரிக்கும் அதே சிரிப்புடன், பாம்பை பிடித்து விளையாடும்.. பாச உணர்வை மட்டுமே சொல்லத்தெரியாத குழந்தைக்கு பயத்தை மட்டும் எப்படி சொல்லத்தெரியும்...

இங்கு அந்த பாம்புதான் அரசியல். அதை கையில் பிடித்து விளையாட ஆரம்பிப்பது உங்கள் தளபதி!” என்றார்.

“நாம் எல்லோரும் சமம்தான்”

“ ‘அரசியல்லாம் எதுக்குங்க.. நாம பாட்டுக்க நடிச்சோமா, நாலு காசு பாத்தோமா’ன்னுதான் ஆரம்பத்துல நானும் நினச்சேன்.. நாம மட்டும் நல்லா இருக்கனும்னு நினைக்கிறது சுயநலம் இல்லையா.? நம்ம வாழ வச்ச மக்களுக்காக எதுவும் செய்யாம இருக்குறது நல்ல விசுவாசமா இருக்குமா...?

விஜய்
விஜய்pt web

ஒரு லெவலுக்கு மேல காசு சேத்து என்ன செய்ய போறோம்..? மக்களுக்கு என்ன செய்ய போறோம்ன்னு ஏகப்பட்ட கேள்விகள்..! இதற்கு ஒட்டுமொத்தமாக விடையைக் கண்டுபிடிக்க யோசித்த போதுதான் ‘அரசியல்’ எனும் விடை கிடைத்தது. உலக வரலாறு, உலக இலக்கியம் சொல்லிக்கொண்டு எம்பி3 ஆடியோவாக பேசப்போறது இல்லை. All ready அரசியல்வாதிகளாக இருப்பவர்களைப் பற்றி அதிகமாக பேசி நேரத்தை வீணாக்கப்போவதில்லை... மேடையில் இருந்தாலும், மேடையின் முன் இருந்தாலும் நான் - நீ, நாங்க - நீங்க என்பதெல்லாம் கிடையாது.. நாம்-தான். நாம் எல்லோரும் ஒன்றுதான், நாம் எல்லோரும் சமம்தான். அதனால் என் நெஞ்சில் குடியிருக்கும் உங்களுக்கு என் உயிர் வணக்கங்கள்

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளை அடிப்படைக் கோட்பாடாக அறிவித்தபோதே நம் உண்மையான எதிரி யார் என்று சொல்லிவிட்டோம்.. சமதர்ம கொள்கையை கையிலெடுத்தபோதே கதறல் சத்தம் கேட்டது.

இங்கு ஒரு கூட்டம்.. யார் அரசியலுக்கு வந்தாலும் குறிப்பிட்ட கலரை அவர்கள் மேல் பூசி, பூச்சாண்டி காட்டி, மக்களை ஏமாற்றி, அவர்கள் மட்டும் அண்டர்கிரவுண்ட் டீலிங் போட்டுக்கொண்டு பாசிசம் பாசிசம் என்கின்றனர்.. அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா? மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.. நீங்கள் என்னதான் மோடி மஸ்தான் வேலையை செய்தாலும் ஒன்னும் நடக்காது..” என்றார் விஜய்.

“கெட்ட பய சார் அந்த சின்ன பையன்” - விஜய் சொன்ன குட்டிக்கதை!

“ஒரு நாட்டுல பெரிய போர் வந்ததாம்.. பவர் ஃபுல்லான தலைமை இல்லாததால் பச்சப்புள்ள கையில பொறுப்பு இருந்ததாம். அதனால் அந்த நாட்டுல இருந்த பெரும் தலைகள் பயத்துல இருந்தாங்கலாம். அந்த சின்ன பையன் நாட்டுடைய படையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ‘போர்க்களம் போலாம்’ என சொன்னார்களாம்.

அப்போது அந்த பெருந்தலைகள் நீ சின்ன பையன் என்றெல்லாம் சொன்னார்களாம். எந்த பதிலும் சொல்லாமல் போருக்கு தனியாக தன் படையுடன் சென்ற அந்த பையன் என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் சொல்லியுள்ளார்கள்.. ஆனால் கெட்ட பய சார் அந்த சின்ன பையன்...” என்றார்.

அதிகாரப்பகிர்வு

“நம்மள நம்ம செயல்பாட்ட நம்பி நம்மலோட சிலபேர் வரலாம் இல்லையா? அதுக்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா? அவங்களையும் அன்போட அரவணிக்கனும் இல்லையா? நம்மள நம்பி வரவங்கள அரவணைச்சுதான பழக்கம்..

நம்மள நம்பி நம்மகூட களமாட வரவங்களுக்கும் ஆட்சி அதிகாரத்துல பங்களிப்பு தந்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும்..” - என்றுள்ளார் விஜய். இது கூட்டணிக்கு விஜய் அழைப்பு விடுத்திருக்கிறாரா விஜய் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

நிறைவடைந்தது தவெக முதல் மாநாடு!

விஜய் உரையைத்தொடர்ந்து, மாநாடு நிறைவடைந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com