தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடிகர் விஜய் தொடங்கினார். கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் அப்போதே தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாறியுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு, தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி. கொள்கை தீபம் ஏந்தி. தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம்” என தெரிவித்திருந்தார்.
விஜய்யின் அறிவிப்பு வெளியானதை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்களது கொண்டாட்டங்களை வெளிப்படுத்தினர்.
இத்தகைய சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தளபதியின் அயராத உழைப்பின் காரணமாக தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை இந்த நேரத்தில் சந்தோசத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சந்தோசத்தை பொதுமக்களுடனும் தமிழக வெற்றிக் கழக தோழர்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம். மாநாடு தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் இன்று தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.