தமிழ்நாடு அரசையும் முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் தரக்குறைவாக பேசியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டியில் இறுதி கட்ட தேர்தல் பரப்புரையின் போது உரத்தூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை தரைக்குறைவாக பேசியதாகவும், தமிழ்நாடு அரசை விமர்சித்து பேசியதாகவும் நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது புகார் எழுந்தது. திருச்சி மாவட்ட திமுக ஐடி விங் மாவட்ட அமைப்பாளர் அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி மாவட்ட கணினி சார் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி அழைத்து வந்தனர். திருச்சி மாவட்ட கணினி சார் குற்ற பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே, சாட்டை துரைமுருகன் கைதிற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்ட நிலையில் திருச்சி மாவட்ட நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் சாட்டை துரைமுருகன் ஆஜர்படுத்தப்பட்டார். போலீசார் தரப்பில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் கோரப்பட்டது. ஆனால், நீதிபதி அதனை ஏற்க மறுத்து சட்டை துரைமுருகனை விடுவித்துவிட்டார்.
விடுவிக்கப்பட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய சாட்டை துரைமுருகன், “என் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவேன்; மேடையில் பாடியது என்னுடையது அல்ல; அந்த பாடல் அதிமுக உடையது” என்றார். அத்துடன், தன்னை திட்டமிட்டு அரசு கொலை செய்ய பார்த்ததாகவும் சாட்டை துரைமுருகன் குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.