குஜராத்தில் மருத்துவம் படித்து வரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவரை தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இனரீதியாகவும், மொழி ரீதியாகவும் தமக்கு தொந்தரவு கொடுக்கப்படுவதாகவும், இதனால் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த மாணவர் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அவர், “ குஜராத்தில் பிஜே மருத்துவக் கல்லூரியில் பொது அறுவை சிகிச்சை பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். கல்லூரியில் நுழைந்த நாள் முதலே ஜாதி ரீதியாக, இன ரீதியாக, மொழி ரீதியாக மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறேன். இதன் உச்சபட்சமாக கடந்த ஜனவரி மாதம் 5-தேதி அறுவை சிகிச்சை செய்யவிடாமல் ஆப்ரேஷன் தியேட்டருக்கு வெளியே நிறுத்திவிட்டனர். மிகுந்த அவமானத்திற்கு ஆளாக்கப்பட்டேன். இதனால் தற்கொலை முயற்சி மேற்கொண்டேன். பின்னர் நண்பர்களின் உதவியால் காப்பாற்ப்பட்டேன்.
பல்கலைக்கழக தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பம் எனக்கு மட்டும் கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நான் தற்கொலை முயன்றது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அதனை வாபஸ் பெற்றால்தான் தேர்வு எழுத அனுமதி கொடுத்து கையெழுத்திடுவோம் என மறைமுகமாக மிரட்டல் விடுக்கின்றனர். படிப்பை தொடர்வதா..? அல்லது வேண்டாமா..? என்ற குழப்பத்தில் இருக்கிறேன். தேர்வை என்னால் எழுத முடியுமா என்ற மன உளைச்சலில் இருக்கிறன்” என வேதனையுடன் கூறியுள்ளார். தமிழக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என்று மாணவர் மாரிராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.