சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெயர்ப் பலகையில் தமிழ் நீக்கப்பட்டு, ஆங்கில மொழியில் மட்டும் பெயர் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்கி வருகிறது. பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை உட்பட 29 ஆராய்ச்சி பாடத்துறைகள் உள்ளன. இங்கே பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இப்பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இணைந்துள்ளன.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் அனைத்து பல்கலைக்கழகத்தின் பெயர் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு மின்னொளியில் ஜொலிக்கும் ‘தமிழ் வாழ்க’ என்ற பலகையும், பெரியார் பல்கலைக்கழகத்தின் மையக் கட்டடத்தின் மேலே ‘பெரியார் பல்கலைக்கழகம்’ என்று தமிழில் மேலேயும், அதற்கு கீழே ஆங்கிலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் என்றும் எழுதப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ‘பெரியார் பல்கலைக்கழகம் சேலம்’ என்று தமிழில் இருந்த பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள பெயர் மட்டும் அப்படியே விடப்பட்டு உள்ளது. தமிழ் பெயர் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதற்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், உடனடியாக தமிழில் பெயர் பலகையை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.