இந்தியாவில் ஒட்டுமொத்தமாக சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகத்திற்கு முதலிடம் கொடுத்து 'இந்தியா டுடே' சிறப்பித்துள்ளதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
'இந்தியா டுடே' கடந்த 1975 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதிலிருந்து, இதன் தலைமை ஆசிரியராக அருண் பூரி இருந்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2017 ஆம் ஆண்டு ’இந்தியா டுடே’ குழுமப்பொறுப்பை தனது மகள் கல்லி பூரியிடம் ஒப்படைத்தார். தேர்ந்த அரசியல் கட்டுரைகளுக்கும் தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கும் புகழ்பெற்ற ’இந்தியா டுடே’ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
கடந்த 2016 டிசம்பர் 5 ஆம் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். ஆனால், அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து சசிகலா முதல்வராக முயற்சி எடுக்கும்போது சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி சிறைக்குச் சென்றார். அதனைத்தொடர்ந்து, பிப்ரவரி 16 ஆம் தேதி தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அவர் முதல்வராக பதவி வகித்துவரும் இந்த மூன்று வருடமும் 'இந்தியா டுடே'வின் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் முதலிடத்திலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
20 மாநிலங்களின் பட்டியலில் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களும் இடம்பிடித்துள்ளன. கேரளா 4 வது இடத்திலும், ஆந்திரா 7வது இடத்திலும், தெலங்கானா 9 வது இடத்திலும், கர்நாடகா 11 வது இடத்திலும் உள்ளன. தமிழகத்தைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசம் 2 வது இடத்திலும், குஜராத் 3 வது இடத்திலும் உள்ளது. இப்பட்டியலில் 11 மாநிலங்கள் பாஜக ஆளாத மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் பிடித்ததற்கான கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தியா டுடே அனுப்பியுள்ளது. இத்தகவலை பெருமையுடன் பகிர்ந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி “இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை முதலிடமாக தேர்ந்தெடுத்து கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியா டுடே இதழ் நிர்வாகத்திற்கு தமிழக அரசு சார்பில், எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே "தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு" தேர்வாகி சாதனை புரிந்துள்ளது. இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.