தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பரிந்துரைப்படி தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் மீண்டும் வரி வசூலை தொடங்கியுள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்பு அமலுக்கு வந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் நாட்டில் சுங்கச்சாவடிகளின் வரி வசூல் நிறுத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகத்திலும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வரி வசூல் செய்யப்படவில்லை. இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் வரி வசூலை தொடங்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள 48 சுங்கச்சாவடிகளில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், ஆத்தூர் மற்றும் திருபரைத் துரை ஆகிய சுங்கச்சாவடிகளை தவிர அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சுங்கவரி வசூல் தொடங்கியுள்ளது.
இந்த சுங்கச்சாவடிகள் வரி வசூலால் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் எனவும், எனவே இதனை அரசு ஒத்திவைக்க வேண்டும் எனவும் ஏற்கெனவே வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். இருப்பினும் சுங்கக்கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளதால் இன்று முதல் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை சற்று அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.