வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 23 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தென் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், 22 ஆம் தேதி திருச்சி, மதுரை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போல், 23 ஆம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.