காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கூட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், பிரதமரை சந்திக்க முடியவில்லை.
இதனிடையே மேலாண்மை வாரியம் அமைப்பது கடினமான வேலை செய்து தமிழகம் வந்திருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். அவருக்கு பின் தமிழகம் வந்த மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம், காவிரி மேலாண்மை அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன என்று கூறினார். ஆனால், அதன்பிற்கு காவிரிநீர் பிரச்னை தொடர்பாக 4 மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, உச்சநீதிமன்ற தீர்ப்பில், மேலாண்மை வாரியம் என்று தெளிவாகக் கூறவில்லை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், தமிழகம் எதிர்பார்க்கும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா என்ற சந்தேகம் எழும்பியது. இதுதொடர்பாக தமிழக எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், காவிரி நீர் பிரச்னை தொடர்பான தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கூட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 15ல் பட்ஜெட் தாக்கலான பிறகு மாலையில் அல்லது 16 ஆம் தேதி சிறப்பு சட்டமன்றம் கூடும் என்று கூறப்படுகிறது.