“தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?” - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!
வருகின்ற ஜூன் 7ஆம் தேதி தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் பேட்டியளித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் நேற்று இணைய வாயிலாக கலந்தாலோசனை நடைபெற்றது. தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து இரண்டு தேதிகள் முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் ஐந்தாம் தேதி முதல் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து முதலமைச்சரின் ஆலோசனையின்படி வருகின்ற ஜூன் 7-ம் தேதி தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது.
மேலும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஒரேடியாக வகுப்புகள் நடத்தாமல், மாதத்தில் ஒரு சனிக்கிழமை அல்லது இரண்டு சனிக்கிழமை வீதம் வகுப்புகள் நடத்தப்பட்டு நாட்கள் ஈடு செய்யப்படும்” என தெரிவித்தார்.