தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கடந்து ஐந்து ஆண்டுகளில் 380.76 % உயர்ந்துள்ளது என இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை குறித்து தமிழ்நாடு முதன்மை தணிக்கை அதிகாரி அம்பலவாணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறியது, ‘’ தமிழகத்தின் 2020-21ம் ஆண்டின், ஆண்டு வருவாய் என்பது 1 லட்சத்து 74 ஆயிரத்து 76 கோடியாக உள்ளது. இது கடந்த 2019-20ஆம் ஆண்டை விட 0.26 விழுக்காடு குறைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் சம்பளம்,ஓய்வூதியம் ,மானியம் ஆகிய செலவினங்கள் ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வருகிறது. 1 லட்சத்து 18 ஆயிரத்து 61 கோடி ரூபாய் 2020-2021 ம் ஆண்டில் செலவிடப்பட்டு உள்ளது. இப்படி தொடர்ந்து அதிகரிக்கும் தவிர்க்க முடியாத செலவால் பிற சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு குறைந்த அளவே செலவிட முடிகிறது.
மேலும், தமிழகத்தில் அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்களுக்கான செலவு அதிகரித்துள்ளது. குறிப்பாக திருமண உதவி, மகப்பேறு உதவி, இலவச மடிக்கணினி, சீருடை போன்ற திட்டங்களுக்கு செலவிடப்படும் மானிய தொகை அதிகரித்து உள்ளதாகவும் 2019-20ம் ஆண்டில் 20 ஆயிரத்து 144 கோடியாக இருந்த இந்த தொகை 2020-21ம் ஆண்டில் 24.65 விழுக்காடு அதிகரித்து 25,110 கோடியாக உயர்ந்துள்ளது.
அதேபோல தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை என்பது கடந்து ஐந்து ஆண்டுகளில் 380.76 % உயர்ந்துள்ளது. 2016-2017ம் ஆண்டுகளில் 12,964 கோடியாக இருந்த பற்றாக்குறை அளவு, 2020-2021ம் ஆண்டில் 62,326 கோடி என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 3% அளவிற்குள் கட்டுபடுத்த தவறியுள்ளது, நிதி பற்றாக்குறை 2019-2020 காட்டிலும் 2020-21ம் நிதி ஆண்டில் 56.17% அதிகரித்து நிதி பற்றாக்குறை 93,983 கோடியாக உள்ளது. 2019-2020 ம் ஆண்டை விட 2020-2021ம் ஆண்டு தமிழக அரசின் வருவாய் 0.26% குறைந்துள்ளது. தமிழக அரசு கடனுக்காக செலுத்தும் வட்டி அதிகரித்துள்ளது. 18.32% மாக இருந்த வட்டி செலுத்தும் தொகை 20.97% மாக உயர்ந்துள்ளது.
அதேபோல தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டம் கீழிருந்து மேல் நோக்கி திட்டமிடல் என்ற கருத்தின்படி வருடாந்திர திட்டங்கள் தயாரிக்கப்படாததால் கள அளவில் உள்ள நிலவரங்களுடன் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை. இதனால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் திட்டத்தின் கீழ் பயன்களை அளிப்பதில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை மற்றும் கரூர் மாவட்ட அமராவதி அணையில் கழிவுநீர் கலக்கிறது இதனால் வேளாண் பணிகள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தணிக்கை துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது’’ என தணிக்கை துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.