செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரையில் உள்ள அண்ணாநகர் உழவர் சந்தை கடந்த 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இது தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் உழவர் சந்தையாகும். இந்த உழவர் சந்தை தற்போது வரை 25 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன.
உழவர் சந்தைகளில், விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் விளையும் விளை பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்வதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் காய்கறிகள் மற்றும் பழ வகைகளை வாங்கிச் செல்கின்றனர்.
மதுரை அண்ணா நகரில் உள்ள இந்த ‘பொன்விழா’ காணும் உழவர் சந்தைக்கு கடந்த 2022ம் ஆண்டு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் சார்பில், தூய்மை மற்றும் பசுமை காய்கறிகளுக்கான சிறந்த சந்தையாக மத்திய உணவு பாதுகாப்புத்துறை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உழவர் சந்தை தொடங்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உழவர் சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு வியாபாரிகள் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி கொண்டாடினர்.