நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘ஏ1’ படத்தில் வரும் ஒரு காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிராமணர் சங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் நிலையத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் ஹரிஹரமுத்து மற்றும் இந்து தமிழர்கட்சி நிறுவன தலைவர் ராமரவிக்குமார் தலைமையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள புதிய படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏ1’ (அக்யூஸ்ட் நம்பர் ஒன்) என்ற படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.
படத்தில் பிராமணர் வீட்டு பெண் காதலை வெளிப்படுத்த ‘ஆம்லேட் சாப்பிட்டா அக்ரஹரத்து மாமி, இதைக்கேட்டு மயங்கி விழுந்த தோப்பனார்’ என்பது போன்ற வசனங்கள் இடம் பெற்றிருந்தது. இதுபோல பிராமணர் சமூகத்தை இழிவுப் படுத்தும் வகையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் பிராமணம் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். படத்தின் இயக்குனர் காட்சிகளை நிக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும், சட்ட ரீதியாக காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ஹரிஹரமுத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இந்து தமிழர் கட்சி நிறுவனர் தலைவர் ராமரவிக்குமார் கூறியபோது, “அக்யூஸ்ட் நம்பர் ஒன் படத்தில் பிராமண சமூக பெண்களின் பேச்சு வழக்கை இழிவுப்படுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் உள்ள சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க வேண்டும். தமிழக அரசும், தணிக்கை துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். மேலும் எந்த சமூகத்தையும் விமர்சனம் செய்து திரைப்படங்கள் எடுக்க கூடாது என்றும், நடிகர் சந்தானம் திருந்த வேண்டும் இல்லையென்றால் திருத்தப்படுவார் என எச்சரிக்கை விடுத்தார்.