தேனியில் முதல்வர் பிரசார கூட்டத்தில் வாகனத்தில் சென்ற பெண்ணை, தேனி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மக்களவைத் தொகுதி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, தேனி நேரு சிலை அருகே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். இதனால் நேரு சிலை அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. நேரு சிலை முன்பு பலத்த கூட்டம் நிலவிதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியது.
இந்த நிலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த டாடா மேஜிக் வாகனம் நெருக்கடியில் சிக்கியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன், வாகனத்தை வேகமாக இயக்குமாறு ஓட்டுநர் ஒருவரை கேட்டுக் கொண்டார். அந்த வாகனத்தில் இருந்த பெண் ஒருவர், முருகேசனை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். அப்போது அந்த பெண்ணின் கன்னத்தில் அவர் வேகமாக அறைந்தார். இதனால் அந்த பெண் நிலைகுலைந்தார். வாகனத்தில் சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை கையெடுத்துக் கும்பிட்ட பெண்ணை காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நடந்த மறியலில் போராட்டத்தில், அப்போதைய திருப்பூர் கூடுதல் எஸ்.பி. பாண்டியராஜன் இது போல பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.