காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்கள் இடையே மிக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. தற்போது மழைநீர் பற்றாக்குறைவால் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகாவும், தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதால் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அரசு சட்டப்போராட்டத்தை முழுவீச்சில் தமிழ்நாடு அரசும் மேற்கொண்டு வருகின்றன. இந்த நேரத்தில் இரு மாநிலங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் இந்த பிரச்னை மிகத் தீவிரமாகவே கையிலெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் தமிழர்கள் சிலர் தாக்கப்படுவதாக பழைய வீடியோக்களை சிலர் பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால், “காவிரி நதி நீர் பிரச்சனை சம்மந்தமாக பல்வேறு சமூக ஊடகங்களில் சிலர் தவறான வதந்திகளை பரப்பக்கூடும். இதை மக்கள் நம்பவேண்டாம்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை தற்போது நடந்தவை போல சித்தரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள். இத்தகைய வதந்திகள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி அதன் விளைவாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
இவ்வாறான வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று அறிவுறுத்தி இருக்கிறார்.