யூடியூபர் இர்ஃபானுக்கு சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்தது. அப்போது அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்ற இர்ஃபான் குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்தும், குழந்தை பிறந்த போது குழந்தையின் தொப்புள் கொடியை தானே வெட்டுவது போன்றும் வீடியோ வெளியிட்டார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மருத்துவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது பத்து நாள் உரிமத்தை ரத்து செய்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவர் நிவேதிதா மற்றும் இர்ஃபான் மீது காவல் துறையில் புகார் அளித்தனர். மேலும் மருத்துவர் மீது தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலிலும் புகார் கொடுத்தனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த விவகாரத்தில் முன்னதாக, இர்பான் தனது உதவியாளர் மூலம் விளக்கக் கடிதம் வழங்கியிருந்தார். அதில், இந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும் எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
வெளிநாட்டில் இருப்பதாக இர்ஃபான் கூறிய நிலையில், அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.