AICTE சார்பில் அரியர் தேர்வுகள் தொடர்பாக தமிழக அரசுக்கு எந்த கடிதமும் வரவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
பொறியியல் அரியர் தேர்வில் தமிழக அரசின் தேர்ச்சி அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரியர் தேர்ச்சி செல்லாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கழகத்திடம் இருந்து தனக்கு மின்னஞ்சல் வந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் “அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் கருத்தை ஏஐசிடிஇ கருத்தாக திணிப்பது கண்டனத்திற்குரியது என்றும், ஏஐசிடிஇ மின்னஞ்சல் வந்திருந்தால் அதை சூரப்பா வெளியிட வேண்டும்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், AICTE சார்பில் அரியர் தேர்வுகள் தொடர்பாக தமிழக அரசுக்கு எந்த கடிதமும் வரவில்லை. யுஜிசி மற்றும் AICTE விதிகளை தமிழக அரசு முழுமையாக பின்பற்றும். அரியர் தேர்வுகளுக்கு தமிழக அரசு விலக்கு அளித்தது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநகரத்திற்கு எந்தவித கோரிக்கை முன் வைத்தார்கள் என்பது தொடர்பாக விளக்கத்தை அண்ணா பல்கலைக்கழகம் தான் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்