போலியோ தடுப்பு மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ நோய் இல்லாத நாடாக அறிவித்துள்ள போதிலும், அண்டை நாடுகளில் போலியோ நோய் தாக்கம் இருப்பதால் போலியோ நோய் கிருமி பரவும் அபாயம் உள்ளது. எனவே,அகில இந்திய அளவில் கூடுதல் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே, உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்தில் வைரஸ் இருப்பது சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடவடிக்கையில் இறங்கிய அரசு, போலியோ தடுப்பு மருந்துகளை தயாரித்து வழங்கும் `பயோமேட்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சீல் வைத்தது.
இதனிடையே, போலியோ சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவியதாக தெரிகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “வருங்காலங்களில் போலியோ தடுப்பு மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்.
குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து தமிழகத்திற்கு பெறப்பட்ட 3.2 லட்சம் போலியோ தடுப்பு மருந்துகள் மீண்டும் கொடுத்து அனுப்பப்பட்டுவிட்டது. அதனால் அதைப்பற்றி வரும் செய்திகளை நம்பி குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை கொடுக்காமல் இருக்க கூடாது” என்று கூறினார்.