உலக அளவில் குரங்கம்மை நோய் பரவி வருவது பற்றி தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில்,
”குரங்கம்மை நோய் உலக அளவில் வேகமாக பரவி வருகிறது. 1958-ம் ஆண்டு இது கண்டறியப்பட்டது. 116 நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க காங்கோ நாடு, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
உலக சுகாதாரம மையம் கடந்த 14-ந் தேதி அவசர நிலையாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மத்திய சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் உத்தரவு கீழ் பல தடுப்பு நடவடிக்கைகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை பன்னாட்டு விமான நிலையங்களில் இன்று முதல் கண்காணிப்பு தொடங்கி உள்ளது.
விமான நிலையங்களில் உடல் வெப்ப பரிசோதனை கண்காணிக்கப்படும். வெப்பம் அதிகமாக உள்ள நபர்கள் கண்டறியபட்டு உடனடியாக விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்படும் அறை உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்படும். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதற்காக 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு உருவாக்கப்படும். இதே போன்று கோவை, மதுரையில் உள்ள 4 நகரங்களில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் யாரும் குரங்கம்மை நோய் தொற்றால் பாதிப்பு இல்லை... தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தானில் கூட ஒருவர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஒன்றிய அரசு குரங்கம்மை நோய் தொற்றை சிறப்பாக கையாளுகிறது “ என்று கூறியுள்ளார்.