செய்தியாளர் சந்தான குமார்
தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அளித்துள்ள நிலையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “லட்சத்தீவு, அதை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. குமரிக்கடல், அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 15-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி எழுதியுள்ள கடிதத்தில், “பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.