ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்: அடுத்தகட்ட நகர்வு என்ன? தண்டனைகள் என்ன? முழுவிவரம்

ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, தமிழ்நாடு அரசு அமைக்கும் ஆன்லைன் விளையாட்டு ஆணையத்திற்கான உரிமை, அதற்கான அதிகார எல்லைகள், முழுமையான வடிவமைப்பு என்னவாக இருக்கும் என்பதற்கான முழு தகவல்களையும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
online gambling
online gamblingTwitter
Published on

சட்டப்பேரவையில் 2 ஆவது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதலை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி முதல் முறையாக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மீண்டும் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஆன் லைன் தடைச்சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அடுத்தது என்ன? என்று பார்க்கலாம்... இந்த சட்ட மசோதா மூலம் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகிறது. மேலும், பணம் அல்லது வெகுமதிகள் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருத்தப்படும், அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் (ரம்மி, போக்கர்) தடை செய்யப்படுகின்றன.

ஆன்லைன் விளையாட்டு ஆணையம் எப்படி செயல்படும்?

தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தை அரசு அமைக்கிறது. இந்த ஆணையத்திற்கு, ஓய்வு பெற்ற, தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத பதவி வகித்தவர் தலைவராக இருப்பார். மேலும் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.

இந்த ஆணையம், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும். உள்ளூர் ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்களுக்கு பதிவு சான்றிதழை வழங்கும். விளையாட்டின் தன்மைப்படி அதை வரிசைப்படுத்தும். ஆன்லைன் விளையாட்டை வழங்குபவர்களை ஆணையம் கண்காணிக்கும். அவர்களைப் பற்றிய தரவுகளை பராமரிக்கும்.

அவசரச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற, தேவைப்பட்டால் தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000-ஐ பயன்படுத்தவும், அரசை ஆணையம் கேட்டுக்கொள்ளும். ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்கள் மீதான புகாரை தீர்த்து வைக்கும்.

சிவில் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரம் போன்று ஆணையத்திற்கும் அதிகாரம் நிர்ணயம்!

அதுமட்டுமல்லாமல், விளையாட்டின் நேரம், அதில் செலுத்தப்படும் பணத்தின் அளவு, வயது கட்டுப்பாடு, போன்றவற்றை ஆணையம் ஒழுங்குபடுத்தும். ஆன்லைன் விளையாட்டை வழங்குபவர்களுக்கு எந்தவொரு உத்தரவையும் ஆணையம் வழங்க முடியும். சிவில் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரம் போல சம்மன் அனுப்புவது, சாட்சி பதிவு செய்வது, ஆவணங்களை கேட்டு வாங்குவது போன்றவற்றை செய்யவும், ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

online gambling
online gamblingTwitter

இந்த சட்ட மசோதா மூலம் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகிறது. மேலும், பணம் அல்லது வெகுமதிகள் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருத்தப்படும், அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் (ரம்மி, போக்கர்) தடை செய்யப்படுகின்றன.

ஊடகங்கள், வங்கிகள் என்ன செய்யக்கூடாது!

எந்தவொரு ஆன்லைன் விளையாட்டை வழங்குபவரும், சூதாட்டத்தை புகுத்தக் கூடாது. அந்த விளையாட்டை விளையாட எவரையும் அனுமதிக்கக் கூடாது. பணம் தொடர்புடைய ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக் கூடாது.

விதிமுறைகளை மீறினால் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும்!

எந்தவொரு ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச் சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும். ஒழுங்குமுறைகளை மீறினால், விளக்கம் கேட்டு அந்தப் பதிவு ரத்து செய்யப்படும். இதற்கு 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இதற்கான மேல்முறையீட்டு குழுவை, ஒரு தலைவர் (ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி) மற்றும் 2 உறுப்பினர்களைக் கொண்டு அரசு அமைக்கும்.

online gambling
online gamblingTwitter

உள்ளூரில் இல்லாத ஆன்லைன் விளையாட்டு வழங்குபவர் எவரும், எந்தவொரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையோ, பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருத்தப்படும் ஆன்லைன் விளையாட்டுகளையோ, ஒழுங்குமுறைக்கு மாறான விளையாட்டுகளையோ வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால், அந்த விளையாட்டு வழங்குபவரை தடை செய்வதற்கு மத்திய அரசை, தமிழக அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.

விளையாடினால், விளம்பரப்படுத்தினால் என்ன தண்டனைகள்?

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.

online gambling
online gamblingTwitter

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் அளிப்போருக்கு, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

மீண்டும் செய்தால் அதிகமாகும் தண்டனைகள்!

இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

online gambling
online gambling

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com