நதிகள் இணைக்கப்படவேண்டுமென தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரியின் புனிதம் மற்றும் போராட்டம் பற்றி கண்ணன் என்பவர் எழுதிய river cauvery என்ற புத்தகத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நதிகள் இணைக்கப்பட்டால் நாடு ஒருங்கிணையும் என்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடையுமெனவும் கூறினார்.
நதிகள் இணைப்பு அவசியம் எனவும் தென் இந்தியா முதல் வட இந்தியா வரை உள்ள ஆறுகள் இணைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடன் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
விழாவில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், அதிமுக ஆட்சிக்கு ஆபத்து வராது என்றும், அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெறும் எனவும் கருத்து கூறினார். இந்த புத்தகம் எந்த வித வெறுப்பு விருப்பு இல்லாமல் தொகுக்கப்பட்டுள்ளது எனவும் காவிரி பற்றி பேசும் அனைவருக்கும் பதில் அளிக்கும் வகையில் இப்புத்தகம் அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நல்லகண்ணுவிற்கு அரசு தரப்பிலிருந்து வீடு வழங்க வேண்டுமெனவும் அவர் விழாவின் முடிவில் செய்தியாளர்களிடம் கூறினார்.