ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் எழுத்துப்பூர்வமாக ஆளுநர், தமிழக அரசுக்கு எதையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
அமைச்சரவையின் பரிந்துரை மீது கடந்த ஓராண்டாக ஆளுநர் தரப்பில் இருந்து எந்த முடிவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஏழு பேரை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கைகளை கடந்த ஆண்டு நிராகரித்த மத்திய உள்துறை அமைச்சகம், இவர்களை விடுவிப்பது அபாயகரமான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும், சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தது. இந்த நிலைபாட்டையே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தற்போது எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.